அமித்ஷா, நிதிஷ்குமார், நவீன் பட்நாயக் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, முதல்-மந்திரிகள் நிதிஷ் குமார், நவீன் பட்நாயக் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
பாட்னா,
கொரோனா தடுப்பூசி திட்டத்தின்படி, 60 வயதை கடந்தவர்களுக்கும், இணை நோய்களை கொண்ட 45 வயதை தாண்டியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. டெல்லியில், பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
அதுபோல், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, டெல்லியில் உள்ள மெடண்டா ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அங்குள்ள டாக்டர்கள் அவருக்கு தடுப்பூசி போட்டனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமித்ஷா, இதே ஆஸ்பத்திரியில்தான் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் தடுப்பூசி போட்டுக்கொண்டார். நேற்று அவருக்கு பிறந்தநாள் ஆகும். பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் மையத்துக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
அவருடன் துணை முதல்-மந்திரிகள் தார்கிஷோர் பிரசாத், ரேணுதேவி, மூத்த மந்திரிகள் விஜய்குமார் சவுத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ் உள்ளிட்டோரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
நிதிஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- நான் நல்ல உடல்நிலையுடன் வந்தேன். நல்ல உடல்நிலையுடனே திரும்புகிறேன். மார்ச் 31-ந் தேதி எனக்கு 2-வது கட்ட தடுப்பூசி போட வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
தடுப்பூசி இலவசமாக போடப்படும். தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், அதற்கான செலவை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும். கொரோனா பாதிப்பு குறைந்தாலும், எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல், ஒடிசா மாநில முதல்-மந்திரியும், பிஜு ஜனதாதள தலைவருமான நவீன் பட்நாயக் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். 74 வயதான அவர், சட்டசபை வளாகத்தில் உள்ள சிகிச்சை மையத்துக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார். அந்த புகைப்படத்தை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
Related Tags :
Next Story