எரிபொருள் விலை உயர்வு: பெட்ரோலிய அமைச்சகம் முன் இளைஞர் காங்கிரசார் போராட்டம்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பெட்ரோலிய அமைச்சகம் முன் இளைஞர் காங்கிரசார் இன்று போராட்டம் நடத்தினர்.
புதுடெல்லி,
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், சமையல் செய்வதற்கு உதவும் கியாஸ் சிலிண்டரின் விலையும் உயர்ந்துள்ளது.
மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த பிப்ரவரி 4ந்தேதி மெட்ரோ நகரங்களில் ரூ.25 உயர்ந்தது. இதனை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி அறிவித்தது. தொடர்ந்து அந்த மாதத்தில் மற்றொருமுறை விலை உயர்வு அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் தலைநகர் டெல்லியில், மகளிர் காங்கிரசார் சாலையில் சமையல் செய்தும், இளைஞர் காங்கிரசார் சட்டைகளை கழற்றி போராட்டம் நடத்தியும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனையானது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
எரிபொருள் விலை உயர்வு பற்றி மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, சர்வதேச சந்தையில் எரிபொருள் உற்பத்தி குறைந்துள்ளது. எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகள் அதிக லாபம் ஈட்டுவதற்காக குறைவான அளவில் எரிபொருளை உற்பத்தி செய்கின்றன.
இதனால் நுகர்வோர் நிலையில் உள்ள நாடுகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. தேவை அதிகரித்த சூழலில் விலை உயர்வும் அதிகரித்து உள்ளது. குளிர்காலத்தில் விலை உயர்வு காணப்படுகிறது. குளிர்கால பருவம் முடிந்ததும் விலை குறையும் என கூறினார்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பெட்ரோலிய அமைச்சகம் முன் இளைஞர் காங்கிரசார் இன்று போராட்டம் நடத்தினர். அமைச்சகத்தின் அலுவலகம் முன் திரண்ட நூற்றுக்கணக்கான காங்கிரசார் கைகளில் பதாகைகளை ஏந்தியபடியும், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடியும் இருந்தனர்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலரை கைது செய்துள்ளனர்.
Related Tags :
Next Story