வீட்டில் வைத்து மந்திரி பி.சி.பட்டீல் தடுப்பூசி போட்ட விவகாரம் - கர்நாடக அரசு விளக்கமளிக்க மத்திய அரசு உத்தரவு


வீட்டில் வைத்து மந்திரி பி.சி.பட்டீல் தடுப்பூசி போட்ட விவகாரம் - கர்நாடக அரசு விளக்கமளிக்க மத்திய அரசு உத்தரவு
x
தினத்தந்தி 5 March 2021 3:32 AM IST (Updated: 5 March 2021 3:32 AM IST)
t-max-icont-min-icon

மந்திரி பி.சி.பட்டீலுக்கு வீட்டில் வைத்து தடுப்பூசி போடப்பட்டது குறித்து விளக்கமளித்து அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக விவசாயத் துறை மந்திரியாக இருப்பவர் பி.சி.பட்டீல். இவரது சொந்த ஊர் ஹாவேரி மாவட்டம் இரேகெரூர் ஆகும். இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி நாடு முழுவதும் 3-வது கட்டமாக 60 வயத்துக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசியை பிரதமர் மோடி உள்பட அனைவரும் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று போட்டுக்கொண்டனர். 

ஆனால் மந்திரி பி.சி.பட்டீல் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்களது வீட்டுக்கு நர்சுகளை வரவழைத்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவரும் சுமார் 30 நிமிடங்கள் ஆஸ்பத்திரிகளில் இருக்க வேண்டும், அதாவது பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா என்பதை பரிசோதிக்க இந்த 30 நிமிட அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதை மீறி மந்திரி பி.சி.பட்டீல் தனது வீட்டில் வைத்து தடுப்பூசி போட்டுக்கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதைதொடர்ந்து கர்நாடக சுகாதாரத் துறை ஆணையர் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

அதில் கட்டாயம் யாருக்கும் வீட்டில் வைத்து தடுப்பூசி போடக்கூடாது. அனைவருக்கும் ஆஸ்பத்திரிகளில் வைத்தே தடுப்பூசி போட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் மந்திரி பி.சி.பட்டீலுக்கு வீட்டில் வைத்து தடுப்பூசி போடப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கமளித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கர்நாடக அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

Next Story