பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த தவறிய வழக்கில் பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பெங்களூரு,
பெங்களூருவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை அகற்றும் பணிக்கு டெண்டர் கோரப்பட்டது. இதில் நிறுவனங்கள் பங்கேற்று தங்களின் விவரங்களை வழங்கினர். அந்த டெண்டரை பெங்களூரு மாநகராட்சி திறப்பதில் காலதாமதம் செய்தது. இதுகுறித்து கர்நாடக ஐகோர்ட்டில் அந்த 3 நிறுவனத்தினரும் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 2019-ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் ஒரு நபர் நீதிபதி, அந்த ஒப்பந்த புள்ளிகளை உடனே திறக்க வேண்டும் என்று பெங்களூரு மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்.
ஆனால் அந்த உத்தரவை பெங்களூரு மாநகராட்சி அமல்படுத்தவில்லை. இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு கர்நாடக ஐகோர்ட்டில் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் மீது மனுதாரர்கள் 3 பேரும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பெங்களூரு மாநகராட்சிக்கு நோட்டீசு அனுப்பியது. இந்த நோட்டீசு அனுப்பி ஒரு மாதத்திற்கு பிறகு ஒப்பந்த புள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஒகா தலைமையிலான அமர்வு, பெங்களுரு மாநகராட்சிக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது. இந்த அபராதத்தொகையில் மனுதாரர்கள் 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த அபராதத்தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story