தினசரி பாதிப்பு அதிகரிப்பு: 18,711 பேருக்கு புதிதாக கொரோனா
இந்தியாவில் மேலும் 18 ஆயிரத்து 711 பேருக்கு புதிதாக கொரோனா தாக்கி உள்ளது. இதுவே 59 நாட்களில் அதிகபட்ச பாதிப்பு என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி,
இந்தியாவில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பரவல், தற்போது மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் புதிதாக பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 18 ஆயிரத்து 327 பேருக்கு கொரோனா தாக்கியது. நேற்று இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து 18 ஆயிரத்து 711 ஆக பதிவாகி உள்ளது. கடந்த 59 நாட்களில் இதுவே அதிகபட்ச பாதிப்பு ஆகும்.
இதன்மூலம் மொத்த பாதிப்பு 1 கோடியே 12 லட்சத்து 10 ஆயிரத்து 799 ஆக அதிகரித்து இருக்கிறது. நேற்று முன்தினம் 7 லட்சத்து 37 ஆயிரத்து 830 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 22 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரத்து 507 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன.
கொரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கை தொடர்ந்து மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 108 பேர் பலியாகினர். நேற்று இந்த எண்ணிக்கை 100 ஆக குறைந்து இருக்கிறது.
மராட்டியத்தில் அதிகபட்ச எண்ணிக்கையாக 47 பேர் பலியாகி இருக்கிறார்கள். அதற்கு அடுத்த படியாக கேரளாவில் 16 பேர் இறந்துள்ளனர்.
நேற்று அந்தமான் நிகோபார், அருணாசலபிரதேசம், சண்டிகார், தத்ராநகர் ஹவேலி டாமன் தியு, கோவா, இமாசலபிரதேசம், ஜார்கண்ட், லடாக், லட்சத்தீவு, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவுக்கு ஒருவர்கூட பலியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.
கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்து 756 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பலி விகிதம் 1.41 சதவீதமாக தொடர்கிறது.
நாட்டில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெற்ற சிகிச்சையின் காரணமாக குணம் அடைவோர் எண்ணிக்கையும் கொஞ்சம், கொஞ்சமாக உயரத்தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் 14 ஆயிரத்து 234 பேர் மீட்கப்பட்டிருந்த நிலையில், நேற்று 14 ஆயிரத்து 392 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதனால் குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 8 லட்சத்து 68 ஆயிரத்து 520 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று குணம் அடைந்தோரில் மராட்டிய மாநிலத்தினர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களது எண்ணிக்கை 6,080 ஆகும். கேரளாவில் 3,517 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனாவின் மீட்பு சதவீதம் 96.95 சதவீதமாக உள்ளது.
கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீள்வதற்காக நாட்டில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தொடர் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1 லட்சத்து 84 ஆயிரத்து 523 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக இந்த எண்ணிக்கை ஏற்றம் கண்டுள்ளது.
தற்போது மொத்த பாதிப்பில் 1.65 சதவீதத்தினர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
மராட்டியத்தில் அதிகபட்சமாக 94 ஆயிரத்து 115 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கேரளாவில் 43 ஆயிரத்து 114 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மிகக்குறைந்த எண்ணிக்கை என்றால் அருணாசலபிரதேசத்தில் 3 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் அதிகரிக்கப்படுகின்றன. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படுகின்றன. கொரோனா தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.