நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பா.ஜனதாவில் சேர்ந்தார் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பா.ஜனதாவில் சேர்ந்தார். பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
கொல்கத்தா,
இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பா.ஜனதாவில் சேர்ந்தார். பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
கடந்த 1980-களில் இந்தியில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் மிதுன் சக்ரவர்த்தி. தமிழில், மணிரத்னம் இயக்கத்தில் ‘குரு’ என்ற படத்தில் நடித்துள்ளார். ‘யாகாவாராயினும் நா காக்க’ என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.
அவர் மேற்கு வங்காளத்தை பூர்வீகமாக கொண்டவர்.
நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு, சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் அவரது பெயர் அடிபட்டதால், எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த மாதம், மும்பையில் மிதுன் சக்ரவர்த்தியை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சந்தித்து பேசினார். அதனால் மிதுன் சக்ரவர்த்தி பா.ஜனதா பக்கம் சாய்வதாக கருதப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு, பா.ஜனதா பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியாவை மிதுன் சக்ரவர்த்தி சந்தித்தார். அப்போது, அவர் பா.ஜனதாவில் இணைந்தார்.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலையொட்டி, பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி நேற்று கொல்கத்தாவுக்கு வந்தார். கொல்கத்தாவில் படை அணிவகுப்பு மைதானத்தில் அவரது பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பிரதமர் மோடி அந்த மைதானத்துக்கு வருவதற்கு முன்பு, அங்கு மிதுன் சக்ரவர்த்தி வந்து அமர்ந்தார்.
பின்னர், பிரதமர் மோடி பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்தார். மிதுன் சக்ரவர்த்தியை பா.ஜனதாவுக்கு வரவேற்பதாக தெரிவித்தார். அந்த பிரமாண்ட கூட்டத்தில் மோடி பேசியதாவது:-
எனது நீண்ட கால அரசியல் வாழ்க்கையில், நூற்றுக்கணக்கான அரசியல் கூட்டங்களில் பேசி இருக்கிறேன். ஆனால், இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை பார்த்ததே இல்லை.
மாற்றத்துக்காக, மம்தா பானர்ஜி மீது நம்பிக்கை வைத்து மக்கள் ஆட்சியில் அமர வைத்தனர். ஆனால், அந்த நம்பிக்கையை மம்தாவும், அவரது கட்சியினரும் நொறுக்கி விட்டனர். வங்காள மக்கள், மம்தாவை சகோதரியாக கருதினர். ஆனால், அவரோ தன் மருமகனுக்கு அத்தையாக மட்டுமே இன்னும் இருக்கிறார்.
அடுத்த 25 ஆண்டு கால வங்காளத்தின் வளர்ச்சிக்கு அடுத்த 5 ஆண்டுகள், பா.ஜனதா அடித்தளம் அமைக்கும். ‘தங்க வங்காளம்’ காணும் கனவு நனவாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.