தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ கல்வியை மாநில மொழியில் கற்பிக்க நடவடிக்கை எடுப்போம்: பிரதமர் மோடி


தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ கல்வியை மாநில மொழியில் கற்பிக்க நடவடிக்கை எடுப்போம்:  பிரதமர் மோடி
x
தினத்தந்தி 30 March 2021 2:41 PM GMT (Updated: 30 March 2021 2:41 PM GMT)

தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ கல்வியை மாநில மொழியில் கற்பிக்க நடவடிக்கை எடுப்போம் என புதுச்சேரியில் நடந்த பிரசாரத்தில் பிரதமர் மோடி இன்று கூறியுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது.   புதுச்சேரி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் என தகவல் வெளியானது.

அதன்படி, தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி புதுச்சேரிக்கு இன்று வருகை தந்துள்ளார்.  அங்கு அவர் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.  பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

புதுச்சேரியில் இன்று விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  144 பிரிவின் கீழ் அரசு இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசும்பொழுது, புதுச்சேரியை உலகின் சிறந்த ஆன்மீக தலங்களில் ஒன்றாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  சாலை, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம்.  மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ.220 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 6 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.  இன்னும் 8 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன.  தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ கல்வியை மாநில மொழியில் கற்பிக்க நடவடிக்கை எடுப்போம்.  மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க மீன்வளத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Next Story