மராட்டியத்தில் முழு ஊரடங்கு தற்போதைக்கு இருக்காது எனத்தகவல்


File photo: PTI
x
File photo: PTI
தினத்தந்தி 31 March 2021 1:30 AM IST (Updated: 31 March 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தினால், அது மக்களை மோசமாக பாதிக்கும் என்று மந்திரிகள் கருத்து தெரிவித்தனர்.

மும்பை, 

மராட்டியத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி இருப்பது, அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருப்பதுடன், பொதுமக்களை கலங்க வைத்து உள்ளது. மின்னல் வேக கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மும்பை நகர் கூட இரவு 8 மணிக்கு மேல் அடங்கி விடுகிறது.

இரவு ஊரடங்கு பெரிய பலனை தருமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பகல் நேரத்திலும், அதாவது முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலித்து வருகிறது. இதனால் மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கடந்த தடவை முழு ஊரடங்கால் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். ஆனால் இந்த தடவை அந்த மாதிரி ஊரடங்கு இருக்காது என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனாலும் முழு ஊரடங்கு நிச்சயம் மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் சிதைக்கும் என்ற கருத்து நிலவுகிறது. மக்கள் மத்தியில் மட்டுமின்றி ஆட்சியாளர்கள் மத்தியிலும் இந்த கருத்து தான் நிலவுகிறது.

இது குறித்து சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியதாவது:-

முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று யாரும் விரும்பவில்லை. முதல்-மந்திரி கூட அதை விரும்பவில்லை. ஆனால் கடைசி திட்டம் தான் ஊரடங்கு. இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் ஊரடங்கு பல பிரச்சினைகளை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தேசியவாத காங்கிரசை சேர்ந்த மந்திரி நவாப் மாலிக் கூறுகையில், "ஊரடங்கை அமல்படுத்தினால், அது மக்களை மோசமாக பாதிக்கும். நாங்கள் மக்கள் துன்பப்படுவதை விரும்பவில்லை" என்றார்.

சிவசேனாவை சேர்ந்த பொதுப்பணித்துறை மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், "ஊரடங்கு நடவடிக்கை யாருக்கும் உதவாது. முக கவசம் அணிய வேண்டும். சுகாதாரத்தை மேம்படுத்தி கொள்வது தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே வழி என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்" என்றார்.

Next Story