பெங்களூருவில் நடன அழகி கொலையில் தங்கை கணவர் கைது


பெங்களூருவில் நடன அழகி கொலையில் தங்கை கணவர் கைது
x
தினத்தந்தி 30 March 2021 9:42 PM GMT (Updated: 30 March 2021 9:42 PM GMT)

பெங்களூருவில் நடன அழகி கொலை வழக்கில் அவரது தங்கையின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் நடன அழகி கொலை வழக்கில் அவரது தங்கையின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தங்கையின் கணவர் கைது

பெங்களூரு ஆர்.டி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நிருபதுங்கா லே-அவுட், 4-வது கிராசில் வசித்து வந்தவர் ஷாரா(வயது 28). இவரது சொந்த ஊர் அசாம் மாநிலம் ஆகும். ஷாராவுக்கு பெற்றோர் இல்லை. அவருக்கு ஒரு சகோதரியும், 2 சகோதரர்களும் உள்ளனர். கடந்த 6 ஆண்டுக்கு முன்பு வேலைக்காக தனது சகோதரர்கள், சகோதரியுடன் ஷாரா பெங்களூருவுக்கு வந்து விட்டார்.

 அதன்பிறகு, ரெசிடன்சி ரோட்டில் உள்ள மதுபான விடுதியில் நடன அழகியாக ஷாரா வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த 27-ந் தேதி ஷாராவை பார்க்க, அவரது சகோதரர் வீட்டுக்கு வந்தார்.

அப்போது அவர் கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். ஷாராவை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியாமல் இருந்தது. இதுகுறித்து ஆர்.டி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஷாராவை கொலை செய்ததாக, அவரது தங்கையின் கணவர் நவாஜ் பாஷா(29) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருமணத்திற்கு எதிர்ப்பு

அதாவது ஷாராவின் தங்கைக்கும், நவாஜ் பாஷாவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்த அவர், ஜாலஹள்ளியில் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். ஷாராவுக்கு திருமணமாகாததால், அவருடன் நட்பை வளர்த்து கொண்ட நவாஜ் பாஷா நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ஷாராவுக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.

ஆனால் ஷாராவுக்கு திருமணம் நடைபெறுவது நவாஜ் பாஷாவுக்கு பிடிக்கவில்லை. இதுபற்றி அவரிடம் நவாஜ் பாஷா கூறியதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் உண்டானது. ஆனாலும் தான் திருமணம் செய்து கொள்வதில் ஷாரா உறுதியாக இருந்துள்ளார்.

 இதுதொடர்பாக கடந்த 26-ந் தேதி இரவு ஷாரா, நவாஜ் பாஷா இடையே மீண்டும் வாக்குவாதம் உண்டானது. அப்போது ஆத்திரமடைந்த நவாஜ் பாஷா வீட்டில் இருந்த கத்தியால் குத்தி ஷாராவை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

புகாா் அளித்து நாடகம்

அதே நேரத்தில் கொலை நடந்தது பற்றி அறிந்ததும் ஆர்.டி.நகர் போலீஸ் நிலையத்தில் தனது மனைவியுடன் வந்து நவாஜ் பாஷா தான் புகார் அளித்திருந்தார். மேலும் ஷாரா கொலை சம்பந்தமாக சிலர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி, அவர்களது பெயர்களையும் போலீசாரிடம் நவாஜ் பாஷா வழங்கி இருந்தார். ஆனால் ஷாராவின் செல்போனை ஆய்வு செய்த போது நவாஜ் பாஷா தான் அடிக்கடி பேசி இருந்ததும், கடந்த 26-ந் தேதி இரவும் அவர்தான் ஷாராவுடன் கடைசியாக பேசி இருந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, நவாஜ் பாஷாவை பிடித்து விசாரித்த போது அவர் ஷாராவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதுடன், போலீசில் புகார் அளித்து நாடகமாடியதும் தெரியவந்தது. கைதான நவாஜ் பாஷா மீது ஆர்.டி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story