தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு இன்று அறுவை சிகிச்சை

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கு இன்று பித்தப்பையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார்(வயது80) கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென வயிற்று வலியால் அவதிப்பட்டார். உடனடியாக அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு பித்தப்பையில் பாதிப்பு இருப்பதும், அதனால் வலி ஏற்பட்டதும் தெரியவந்தது. பின்னர் அவர் நேற்று முன்தினம் பிற்பகலில் வீடு திரும்பினார். புதன்கிழமை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும், இதற்காக அவர் அன்றைய தினத்தில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவார் என்றும் தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியிருந்தார்.
இந்தநிலையில் திடீரென ஒரு நாளைக்கு முன்னதாகவே நேற்று சரத்பவார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மீண்டும் வயிறு வலி ஏற்பட்டதால் முன்கூட்டியே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக நவாப் மாலிக் கூறினார்.
இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணி அளவில் சரத்பவாருக்கு பித்தப்பை பாதிப்பிற்கான அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும், பின்னர் உடல்நலம் முன்னேற்றத்தை பொறுத்து அவர் வீடு திரும்புவார் என்றும், அவரது உடல் நிலை குறித்து கவலைப்பட வேண்டியது இல்லை என்றும் மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.
Related Tags :
Next Story