மராட்டியத்தில் ஒரே மாதத்தில் மட்டும் 6½ லட்சம் பேருக்கு கொரோனா; அதிவேக பரவலுக்கு காரணம் என்ன?
மராட்டியத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 6½ லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிவேக பரவலுக்கு காரணம் குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
புதிய உச்சம்
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பின் 2-வது அலை விசுவரூபம் எடுத்து வருகிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.இருப்பினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.இதன் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 6 லட்சத்து 51 ஆயிரத்து 513 பேர் நோய் தொற்றுக்கு ஆளானார்கள்.
கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் பிப்ரவரி 28-ந் தேதி வரை 5 மாதங்களில் மராட்டியம் முழுவதும் 7 லட்சத்து 38 ஆயிரத்து 377 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் தற்போது ஒரே மாதத்தில் சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பது, அதன் பரவலின் வேகம் பலமடங்கு அதிகரித்து இருப்பதை காட்டுகிறது.
மும்பையில்...இதேபோல மும்பையில் மட்டும் கடந்த மாதம் (மார்ச்) 88 ஆயிரத்து 710 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது அதற்கு முந்தைய 2 மாதங்களை ஒப்பிடுகையில் 475 சதவீத மடங்கு அதிகமாகும். பிப்ரவரி மாதம் 18 ஆயிரத்து 359 பேரும், ஜனவரியில் 16 ஆயிரத்து 328 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதேபோல கடந்த மாதம் மட்டும் கொரோனாவுக்கு 216 பேர் பலியானார்கள். அதற்கு முந்தைய 2 மாதங்களில் 237 பேர் பாதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிபுணர்கள் கருத்துமுகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது போன்ற கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மக்கள் புறக்கணிப்பதே முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து கொரோனா தடுப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘முககவசம் அணியாதவர்களுக்கு அபராதத்தை அதிகரிப்பது குறித்து அதிகாரிகள் மற்றும் மந்திரிகளிடையே பல கட்ட விவாதங்கள் நடைபெற்றது. இவ்வாறு செய்வது அழுத்தத்தை அளிக்கக்கூடும். இருப்பினும் மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய இருப்பு கரத்தை பயன்படுத்த அரசு விரும்பவில்லை’ என்றார்.