அதிகரிக்கும் கொரோனா தொற்று: மாநில தலைமை செயலாளர்களுடன் மத்திய கேபினட் செயலாளர் ஆலோசனை; தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்


அதிகரிக்கும் கொரோனா தொற்று: மாநில தலைமை செயலாளர்களுடன் மத்திய கேபினட் செயலாளர் ஆலோசனை; தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 2 April 2021 7:22 PM GMT (Updated: 2 April 2021 7:22 PM GMT)

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மாநில தலைமை செயலாளர்களுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்திய மத்திய கேபினட் செயலாளர், வைரஸ் பரவலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

உயர்மட்ட ஆலோசனை

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமெடுத்து வருகிறது. கடந்த அக்டோபர் 2-ந்தேதிக்குப்பிறகு முதல் முறையாக 81 ஆயிரம் பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டு இருப்பது மத்திய-மாநில அரசுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதைப்போல கொரோனாவால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் டி.ஜி.பி.க்களுடன் மத்திய கேபினட் செயலாளர் ராஜீவ் கவுபா நேற்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இதில் தொற்று பரவல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

தொற்று விகிதம் அதிகரிப்பு

குறிப்பாக கடந்த மாதம் இந்தியாவில் தொற்றின் அதிகரிப்பு விகிதம் 6.8 சதவீதமாக இருந்ததை சுட்டிக்காட்டிய கேபினட் செயலாளர், இது கடந்த ஆண்டின் உச்சபட்ச அளவான 5.5 சதவீதத்தை (ஜூன்) கடந்திருப்பதாக எச்சரித்தார். மேலும் நாட்டில் தினசரி கொரோனா இறப்பு விகிதமும் 5.5 சதவீதமாக அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். அத்துடன் கடந்த ஆண்டின் மிகப்பெரிய உச்சபட்ச ஒருநாள் தொற்று எண்ணிக்கையாக 97 ஆயிரம் இருந்த நிலையில், தற்போது 81 ஆயிரம் என்ற முக்கியமான கட்டத்தை நாடு எட்டியிருப்பதாகவும் கூட்டத்தில் எடுத்துக்கூறப்பட்டது.

11 மாநிலங்களால் கவலை

இதில் முக்கியமாக, தற்போதைய தொற்று பரவலில் மிகுந்த கவலையளிக்கும் மாநிலங்களாக 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அதாவது மராட்டியம், பஞ்சாப், கர்நாடகா, கேரளா, சத்தீஷ்கார், சண்டிகர், குஜராத், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி மற்றும் அரியானா ஆகிய மாநிலங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளான மாநிலங்களாக அடையாளம் காணப்பட்டு உள்ளன.

கடந்த 31-ந்தேதி வரையிலான முந்தைய 14 நாட்களில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேரும், கொரேனாவால் உயிரிழந்தவர்களில் 90.5 சதவீதம் பேரும் இந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் பல மாநிலங்கள் கடந்த ஆண்டு அடைந்த உச்சத்தை ஏற்கனவே கடந்துள்ளன. சில மாநிலங்கள் நெருங்கியுள்ளன.

அபராதம் விதிக்க நடவடிக்கை

எனவே இந்த மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேபினட் செயலாளர் அறிவுறுத்தினார். குறிப்பாக போலீஸ் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் பிற சட்டம்-நிர்வாகம் நடைமுறைகளின் படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாதவர்களுக்கு கடும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

மாநிலங்கள் ஒவ்வொன்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மீண்டும் கேட்டுக்கொண்ட ராஜீவ் கவுபா, தடுப்பூசி போடுதல், கட்டுப்படுத்துதல், கண்காணிப்பு நடவடிக்கைகள் போன்ற பொருத்தமான நடவடிக்கைகள் மற்றும் கடின உழைப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

 


Next Story