ஊரடங்கு இல்லை என்று உறுதியாக கூற முடியாது; ஓரிரு நாளில் கடும் கட்டுப்பாடுகள்; மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு


உத்தவ் தாக்கரே
x
உத்தவ் தாக்கரே
தினத்தந்தி 2 April 2021 11:00 PM GMT (Updated: 2 April 2021 11:00 PM GMT)

மராட்டியத்தில் ஊரடங்கு இல்லை என்று உறுதியாக கூற முடியாது என்றும், ஓரிரு நாட்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

மராட்டியத்தில் கொரோனா 2-வது அலை புதிய அவதாரம் எடுத்து மக்களை வறுத்து எடுத்து வருகிறது.

ஆலோசனை

மாநிலம் முழுவதும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நேற்று முன்தினம் 43 ஆயிரத்தை தாண்டி இருந்தது. அது நேற்று மேலும் விசுவரூபம் எடுத்து 47 ஆயிரத்து 827 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கி விட்டது. கொரோனாவுக்கு நேற்று மேலும் 202 பேர் உயிரிழந்தனர்.இதன் காரணமாக மராட்டியத்தில் மீண்டும் முழு ஊரடங்கு குறித்து மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.கொரோனா பாதிப்பின் நிலைமை எல்லைமீறி போனதால் அதன் சங்கிலி தொடரை உடைப்பது குறித்து நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அதிகாரிகள், நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் இரவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சமூக வலைத்தளம் மூலம் மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

டாக்டர்களுக்கு எங்கே போவது?

மராட்டியத்தில் கொரோனா முதல் அலையை விட 2-வது அலை தீவிரமாக உள்ளது. தற்போதைய தொற்று பரவல் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், சுகாதார கட்டமைப்பில் பற்றாக்குறை ஏற்படலாம். இப்படியே தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்றால், டாக்டர்கள், சுகாதார ஊழியர்களுக்கு நாம் எங்கே போவது?.நாட்டின் மொத்த பாதிப்பில் 50 சதவீதத்திற்கு மேல் மராட்டியத்தில் உள்ளது. மராட்டியத்தில் கொரோனா அதிகரிப்பால் மத்திய அரசும் கவலை தெரிவித்து உள்ளது.

ஓரிரு நாட்களில் கட்டுப்பாடுகள்

முழு ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு விரும்பவில்லை. அதற்கு எதிரான நிலையில் தான் நானும் உள்ளேன். ஆனால் ஊரடங்கு இல்லை என்று உறுதியாக கூற முடியாது.ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் பொருளாதாரத்தை பாதிக்கும். அது தீங்கு விளைவிக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். கொரோனாவை கட்டுப்படுத்த இன்னும் ஓரிரு நாட்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்படும்.

வில்லனாக மாற தயார்

மாநில பொருளாதாரத்தை அரசு காக்க வேண்டியது உள்ளது. இதேபோல மக்களின் உயிர், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். மக்களின் உயிரை காக்க நான் வில்லனாக மாற தயார். இந்த கொரோனா சூழலில் அரசியல் கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.தற்போது தினமும் 1 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதை தினமும் 2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்துவது அரசின் இலக்கு.பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கையை கழுவ வேண்டும். கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டதால் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று கூற முடியாது. அது ஆபத்தை குறைக்க உதவும். முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பலர் முக கவசம் அணிவதில்லை. அதனால் தான் அவர்களை கொரோனா தொற்று தாக்குகிறது.

இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.


Next Story