மும்பையில் புதிதாக 8,832 பேருக்கு கொரோனா; தாராவியில் 73 பேருக்கு தொற்று உறுதி


மும்பையில் புதிதாக 8,832 பேருக்கு கொரோனா; தாராவியில் 73 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 3 April 2021 4:38 AM IST (Updated: 3 April 2021 4:38 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் இதுவரையில் இல்லாத புதிய உச்சமாக நேற்று 8,832 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தாராவியில் 73 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

8 ஆயிரம் பேருக்கு தொற்று

மும்பையில் அதிவேகமாக கொரோனா பரவி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று மட்டும் 8 ஆயிரத்து 832 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நடப்பாண்டில் இதுவரை பதிவான அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு இதுவாகும். நேற்று பாதிக்கப்பட்டவர்களையும் சேர்ந்து இதுவரை தலைநகரில் 4 லட்சத்து 32 ஆயிரத்து 192 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

20 பேர் பலி

இந்த உயிர்க்கொல்லி தொற்றுநோய்க்கு நேற்று மேலும் 20 பேர் இறந்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து தலைநகர் மும்பையில் இறப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 724 ஆக அதிகரித்தது. அதேநேரம் 5 ஆயிரத்து 352 பேர் சிகிச்சை பின் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மும்பையில் நோய் இரட்டிப்பாகும் காலம் 46 நாட்களாக குறைந்துள்ளது. தற்போது மும்பையில் 70 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. 657 கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டு உள்ளது.

தாராவியில் 73 பேர்

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் நேற்று புதிதாக 73 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தாராவியில் தொற்று பாதிப்பு 5 ஆயிரத்து 58 ஆக அதிகரித்து உள்ளது. மும்பை புறநகர் பகுதிகளான வசாய்-விரார் மாநகராட்சியில் புதிதாக 358 பேருக்கும், தானே மாநகராட்சியில் 1,370 பேருக்கும், கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சியில் 1,108 ஆக பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.


Next Story