காங்கிரஸ் மேலிட தலைவருடன் மந்திரி அனில் தேஷ்முக் விவகாரம் குறித்து காங்கிரஸ் மந்திரிகள் ஆலோசனை


அனில் தேஷ்முக்
x
அனில் தேஷ்முக்
தினத்தந்தி 2 April 2021 11:51 PM GMT (Updated: 2 April 2021 11:51 PM GMT)

காங்கிரஸ் மேலிட தலைவருடன் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் மந்திரிகள் ஆலோசனை நடத்தினர்.

அரசியல் பரபரப்பு

தேசியவாத காங்கிரசை சேர்ந்த உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மீது சமீபத்தில் முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் கூறிய குற்றச்சாட்டு மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவர் முதல்-மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் மந்திரி அனில் தேஷ்முக் மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூல் செய்து தருமாறு கூறியதாக தெரிவித்திருந்தார்.இந்த குற்றச்சாட்டை அடுத்து அனில் தேஷ்முக்கை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா வலியுறுத்தி வருகிறது.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி மந்திரிகள் நேற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மராட்டிய மாநில பொறுப்பாளரும், கட்சியின் செயலாளருமான எச்.கே. பாட்டீலுடன் இந்த பிரச்சினை குறித்து விவாதித்தனர்.

அரசிற்கு களங்கம்

“தேசியவாத காங்கிரை சேர்ந்த மந்திரி அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் மாநில அரசின் பெயருக்கு எவ்வாறு களங்கம் ஏற்பட்டுள்ளது. தங்கள் கட்சி எவ்வாறு தேவையில்லாமல் இந்த பிரச்சினையில் தாக்கப்படுகிறது” என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளது.

அதேபோல ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் பதவியில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நீக்கிவிட்டு சரத்பவாரை அப்பதவியில் நியமிக்கவேண்டும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பலமுறை வலியுறுத்தியது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதேபோல் எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி அபிவிருத்தி நிதி முறையாக வழங்கப்படுவதில் நிலவும் பிரச்சினை குறித்தும் அவரிடம் மந்திரிகள் தெரிவித்தனர். சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 12 மந்திரிகள் உள்ளனர்.


Next Story