இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 89 ஆயிரம் பேருக்கு கொரோனா; பலி எண்ணிக்கையும் எகிறுகிறது


இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 89 ஆயிரம் பேருக்கு கொரோனா; பலி எண்ணிக்கையும் எகிறுகிறது
x
தினத்தந்தி 3 April 2021 11:57 PM IST (Updated: 3 April 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையும் எகிறி 700-ஐ கடந்தது.

ஒவ்வொரு நாளும் பல்லாயிரம்

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் எகிறுகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது.

நேற்று முன்தினம் 81 ஆயிரத்து 466 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், நேற்று பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் 89 ஆயிரத்து 129 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மொத்த பாதிப்பு என்பது 1 கோடியே 23 லட்சத்து 92 ஆயிரத்து 260 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் நீடிக்கிறது.

மராட்டியம், தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள்

நேற்று புதிதாக கொரோனா தாக்குதலுக்கு ஆளான 89 ஆயிரத்து 129 பேரில் 81.42 சதவீதத்தினர் மராட்டியம், கர்நாடகம், சத்தீஷ்கார், டெல்லி, தமிழகம், உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மராட்டிய மாநிலத்தில் மட்டும் புதிதாக தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 913 ஆகும்.

புனே, மும்பை, நாக்பூர், தானே, நாசிக், பெங்களூரு நகரம், அவுரங்காபாத், டெல்லி, அகமதுநகர், நாந்தெட் ஆகிய 10 மாவட்டங்கள், நேற்றைய மொத்த பாதிப்பில் சரிபாதியளவு பங்கை கொண்டுள்ளன.

பலியும் எகிறுகிறது...

கொரோனாவால் ஏற்படுகிற உயிர்ப்பலியும் எகிறுவது கவலை அளிக்கிறது. நேற்று முன்தினம் 469 பேர் பலியாகினர். நேற்று இந்த எண்ணிக்கை 714 ஆக எகிறியது. இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு இரையானோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்து 110 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உலகளவில் கொரோனா வைரசால் ஏற்படும் இறப்பில் அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோவை அடுத்து இந்தியா 4-வது இடத்தில் தொடர்கிறது.

நேற்று உயிரிழந்த 714 பேரில், பெருமளவினர் (481) மராட்டிய மாநிலத்தினர் என்பது அந்த மாநில மக்களை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. பஞ்சாப்பில் 57 பேர், சத்தீஷ்காரில் 43 பேர், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் 16 பேர் பலியாகி உள்ளனர்.

அதே நேரத்தில், அந்தமான் நிகோபார், அருணாசலபிரதேசம், அசாம், தத்ராநகர் ஹவேலி தாமன் தியு, லடாக், லட்சத்தீவு, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிசா, சிக்கிம், திரிபுரா ஆகிய 13 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் நேற்று கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பில் இருந்து தப்பின.

கொரோனா இறப்பு விகிதம் என்பது நமது நாட்டில் 1.32 சதவீதமாக உள்ளது.

44 ஆயிரம் பேர் நலம்

நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் நாடு முழுவதும் 44 ஆயிரத்து 202 பேர் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றில் இருந்து நலம் பெற்றுள்ளனர்.

இதனால் இந்தியாவில் அந்த நோய்த்தொற்றில் இருந்து நலம் பெற்றவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சத்து 69 ஆயிரத்து 241 ஆக அதிகரித்து இருக்கிறது.

நேற்று நலம் பெற்றவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் மராட்டிய மாநிலத்தவர் ஆவார்கள். அங்கு 24 ஆயிரத்து 126 பேர் நலம் பெற்றனர்.

இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதத்தை பொறுத்தமட்டில், அது 93.36 சதவீதமாக உள்ளது.

6.58 லட்சம் பேர் சிகிச்சை

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது. நேற்றும் கூட இந்த எண்ணிக்கையில் புதிதாக 44 ஆயிரத்து 213 பேர் சேர்ந்துள்ளனர்.

நேற்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனாவில் இருந்து விடுபடுவதற்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 58 ஆயிரத்து 909 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 5.32 சதவீதம் ஆகும்.

மத்திய அரசு உத்தரவு

நேற்று முன்தினம் மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி பெருகி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவாதித்ததும், சிகிச்சை பெறுவோர் மற்றும் பலியாவோர் எண்ணிக்கையை குறைக்க உடனடியாக நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு உத்தரவிட்டதும் நினைவுகூரத்தக்கது.

 


Next Story