இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 93 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி; 513 பேர் பலி
இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 93 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஒரு நாளில் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமும் அடைந்துள்ளனர்.
அதிர வைக்கும் கொரோனா அலை
கொரோனா வைரஸ் அலை தொடர்ந்து நமது நாட்டைத் தாக்கி வருகிறது. தினந்தோறும் இந்த கொடிய தொற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது அதிர வைப்பதாக அமைந்துள்ளது. அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் நாடு முழுவதும் புதிதாக 93 ஆயிரத்து 249 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவே அதிகபட்ச பாதிப்பு ஆகும். நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று கூடுதலாக சுமார் 4 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.இதுவரை நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே 24 லட்சத்து 85 ஆயிரத்து 509 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று கொரோனாவின் தாக்குதலுக்கு ஆளான 93 ஆயிரத்து 249 பேரில் மராட்டியம், சத்தீஷ்கார், கர்நாடகம், டெல்லி, தமிழகம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே 80.96 சதவீதத்தினர் ஆவார்கள். இந்த மாநிலங்கள் கொரோனாவின் மோசமான பாதிப்பில் இருந்த மீள நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிற மராட்டிய மாநிலத்தில் மட்டுமே 49 ஆயிரத்து 447 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று பாதித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் புதிதாக 3,290 பேருக்கு கொரோனா தாக்கி உள்ளது என மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இதற்கிடையே நேற்று முன்தினம் ஒரே நாளில் 11 லட்சத்து 66 ஆயிரத்து 716 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகிறது.
பலி குறைந்ததுநேற்றுமுன்தினம் கொரோனாவால் 714 பேர் இறந்தது, அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நேற்று கொஞ்சம் பலி குறைந்துள்ளது. 24 மணி நேரத்தில் 513 பேர் இறந்துள்ளனர். நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை ஏறத்தாழ 200 குறைவு என்பது சற்று ஆறுதல் அளிக்கிற தகவலாக அமைந்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக 277 பேர் பலியாகி உள்ளனர். பஞ்சாப்பில் 49 பேர், சத்தீஷ்காரில் 36 பேர், கர்நாடகத்தில் 19 பேர், மத்திய பிரதேசத்தில் 15 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள்.
14 மாநிலங்களில் பலி இல்லைஇந்தியாவில் இந்த கோரத்தொற்றுக்கு இதுவரையில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 623 பேர் இறந்திருக்கிறார்கள். நாட்டிலேயே அதிகளவில் மராட்டியத்தில் 55 ஆயிரத்து 656 பேர் இதுவரை கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர். நேற்றை பொறுத்த அளவில் திரிபுரா, சிக்கிம், புதுச்சேரி, ஒடிசா, நாகலாந்து, மிசோரம், மேகாலயா, மணிப்பூர், லட்சத்தீவு, லடாக், தத்ராநகர் ஹவேலி டாமன் தியு, அசாம், அருணாசலபிரதேசம், அந்தமான் நிகோபார் ஆகிய 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலி இல்லை என்பது நிம்மதி அளிக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் ஏற்படுகிற உயிர்ப்பலி விகிதம் 1.32 சதவீதமாக நீடிக்கிறது.
60 ஆயிரம் பேர் மீட்புநேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெற்ற நல்ல சிகிச்சையின் பலனாக 60 ஆயிரத்து 48 பேர் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை மீட்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 16 லட்சத்து 29 ஆயிரத்து 289 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா மீட்பு விகிதம், 93.14 சதவீதமாக இருக்கிறது. நேற்று மராட்டிய மாநிலத்தில் மட்டுமே 37 ஆயிரத்து 821 பேர் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
7 லட்சத்தை நெருங்குகிறதுஇந்தியாவில் கொரோனாவில் இருந்து மீட்கப்படுவதற்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்குகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் 6 லட்சத்து 91 ஆயிரத்து 597 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் 5.54 சதவீதம் ஆகும். கடந்த பிப்ரவரி 12-ந் தேதி மிகக்குறைந்த விகிதமாக1.25 சதவீதத்தினர் மட்டுமே சிகிச்சையில் இருந்தது நினைவுகூரத்தக்கது.