‘வளர்ச்சிக்கான செயல்திட்டம், காங்கிரசிடம் இல்லை’; அசாமில் அமித்ஷா இறுதிக்கட்ட பிரசாரம்


‘வளர்ச்சிக்கான செயல்திட்டம், காங்கிரசிடம் இல்லை’; அசாமில் அமித்ஷா இறுதிக்கட்ட பிரசாரம்
x
தினத்தந்தி 5 April 2021 12:44 AM IST (Updated: 5 April 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

வளர்ச்சிக்கான செயல்திட்டம் காங்கிரசிடம் இல்லை என்று அசாமில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் செய்த அமித்ஷா குறிப்பிட்டார்.

அசாமில் அமித்ஷா பிரசாரம்
அசாம் சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மூன்றாவது இறுதிக்கட்ட தேர்தல் நாளை 40 தொகுதிகளில் நடைபெறுகிறது. இறுதிக்கட்ட தேர்தலை சந்திக்கிற பார்பேட்டாவில் நேற்று நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார். 


அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியானது மக்களை பிரித்தாள நினைக்கிறது. ஆனால் பா.ஜ.க. அப்படியல்ல. அனைவருடனும் இணைந்து, அனைவருக்கும் வளர்ச்சி, அனைவருக்கும் நம்பிக்கை என்பதே பா.ஜ.க.வின் மந்திரம் ஆகும்.

‘காங்கிரசால் தீர்வு காண முடியாது’
காங்கிரஸ் கட்சியால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, ஒரு சுற்றுலாப்பயணி போலதான் இங்கு வந்து போகிறார். அவர்களிடம் வளர்ச்சிக்கான செயல்திட்டம் எதுவும் இல்லை.5 ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்தேன். பிரதமர் மீது நம்பிக்கை வையுங்கள், நாங்கள் வன்முறையையும், போராட்டங்களையும் முடிவுக்கு கொண்டு வருகிறோம் என்று கூறினேன். தற்போது இந்த மாநிலம் முன்னேற்றத்தை நோக்கி வளர்ச்சிப்பாதையில் போகிறது.மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த மாநிலத்தை வெள்ளத்தில் இருந்து விடுவிப்போம். இதற்கான செயல்முறையை பிரதமர் ஏற்கனவே தொடங்கி உள்ளார்.

நம்பிக்கை
இங்கு 2 கட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்து விட்டது. இந்த தேர்தல்களிலேயே அடுத்த அரசை அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை பலத்தை நாங்கள் பெற்றுவிடுவோம் என்று நம்புகிறோம்.அடுத்த நல்ல செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது. அங்கு மம்தா போகிறார். பா.ஜ.க. ஆட்சிக்கு வருகிறது. 200 இடங்களுக்கு மேல் பிடித்து பா.ஜ.க. வெற்றி பெறும்.கடந்த 5 ஆண்டுகளில் அசாமில் வரலாற்றுச்சிறப்புமிக்க போடோ ஒப்பந்தம் கையெழுத்தானது. 2 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் சரண் அடைந்துள்ளனர். அவர்கள் பொதுவான நீரோட்டத்துக்கு- இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.வன்முறையை பரப்புகிற அரசு வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களா? அல்லது இரட்டை என்ஜின் அரசாங்கம் வேண்டும் என்று விரும்புவீர்களா?

இவ்வாறு அவர் கூறினார்

Next Story