இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு மீதமிருக்கும் நிலையில் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா வெற்றி பெறும் என கணிக்க நீங்கள் கடவுளா? பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி


இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு மீதமிருக்கும் நிலையில் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா வெற்றி பெறும் என கணிக்க நீங்கள் கடவுளா? பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி
x
தினத்தந்தி 4 April 2021 7:34 PM GMT (Updated: 4 April 2021 7:34 PM GMT)

மேற்கு வங்காளத்தில் இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு மீதமிருக்கும் நிலையில், அங்கு பா.ஜனதா வெற்றி பெறும் என கணிப்பதற்கு நீங்கள் கடவுளா? என பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி ஆரூடம்
மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் களத்தில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே தொடர்ந்து வார்த்தை மோதல்கள் வெளிப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்றுமுன்தினம் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த பிரதமர் மோடி, அங்கு தேர்தலுக்குப்பின் பா.ஜனதா அரசு அமையும் என கூறினார்.புதிய அரசு பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்பேன் எனவும், மாநிலத்தில் பிரதமர் கிசான் நிதி திட்டத்தை வெகு விரைவில் அமல்படுத்துமாறு அப்போது வலியுறுத்துவேன் என்றும் கூறியிருந்தார்.

மம்தா பானர்ஜி பதிலடி
இது திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு அவர் நேற்று பதிலடி கொடுத்துள்ளார். ஹூக்ளி மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘உங்களைப்பற்றி நீங்கள் (மோடி) என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? மாநிலத்தில் இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு மீதமிருக்கையில், மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியமைக்கும் என கணிப்பதற்கு நீங்கள் என்ன கடவுளா? அல்லது மனித சக்திக்கு அப்பாற்பட்டவரா?’ என அடுக்கடுக்காக கேள்விக்கணைகளை தொடுத்தார்.பிரதமர் மோடியின் சமீபத்திய வங்காளதேச பயணம், அங்கு கலவரத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அமித்ஷா மீதும் குற்றச்சாட்டு
இதைப்போல மாநிலத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை சிதறடிப்பதாக இந்திய மதசார்பற்ற முன்னணி நிறுவனர் அப்பாஸ் சித்திக்கியையும் அவர் மறைமுகமாக சாடினார்.இது குறித்து அவர் கூறும்போது, ‘இந்த போட்டிக்களத்தில் புதிதாக ஒருவர் (சித்திக்கி) வந்துள்ளார். மாநிலத்தில் சிறுபான்மையினர் வாக்குகளை பிரிப்பதற்கு முயற்சிக்கும் அவர், இதற்காக பா.ஜனதாவிடம் இருந்து பணம் வாங்கி வருகிறார். வகுப்புவாத அறிக்கைகளை வெளியிடும் அவர் நீண்ட தூரம் செல்லமாட்டார்’ என்று தெரிவித்தார்.அப்பாஸ் சித்திக்கியின் இந்திய மதசார்பற்ற முன்னணி கட்சி காங்கிரஸ்-இடதுசாரி 
கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.மாநிலத்தில் போலீஸ் அதிகாரிகளை இடமாற்றுவதற்கு உள்துறை மந்திரி அமித்ஷா, தேர்தல் கமிஷனை அறிவுறுத்தி வருவதாகவும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

Next Story