கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின


கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 7 April 2021 4:30 AM IST (Updated: 7 April 2021 4:30 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் பல இடங்களில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலைகள் வெறிச்சோடின.

திடீரென கடைகள் மூடல்

மராட்டியத்தில் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பகலில் 144 தடை உத்தரவை அரசு பிறப்பித்து உள்ளது.இதன் காரணமாக மும்பையில் நேற்று போலீசார் 144 தடை உத்தரவை அமல்படுத்த தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். 5 பேருக்கு மேல் கூட தடை விதித்தனர். சில இடங்களில் கடைகளை அடைக்க போலீசார் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் காலையில் திறக்கப்பட்ட அத்தியாவசியமற்ற கடைகளை வியாபாரிகள் ஆங்காங்கே திடீர் திடீரென அடைத்தனர். தாராவியிலும் இவ்வாறு கடைகள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் மத்தியிலும் குழப்பம் ஏற்பட்டது.

அரசு உத்தரவு

இற்கிடையே அத்தியாவசியமற்ற கடைகளை மூட அரசு புதிய உத்தரவை பிறப்பித்து இருப்பதாக தெரியவந்தது. அதன்படி அத்தியாவசியமற்ற பொருட்கள், சேவைகளை வழங்கி வரும் கடைகளை வருகிற 30-ந் தேதி வரை அடைக்குமாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.மெடிக்கல், காய்கறி கடைகள், மளிகை கடைகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை தொடர்ந்து திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அரசின் இந்த திடீர் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். போரிவிலி மற்றும் பெண்டி பஜாரில் அவர்கள் கூடி அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். போரிவிலியில் வியாபாரிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

சாலைகள் வெறிச்சோடின

மேலும் போலீஸ் கெடுபிடி காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. கடற்கரைகள் மூடப்பட்டன. இதேபோல மக்கள் கூடும் இடங்களும் மூடப்பட்டன. இதனால் மும்பை நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.இதேபோல தானேயில் கடைகள் அடைப்புக்கு எதிராக வியாபாரிகள் பலர் போராட்டம் நடத்தினர்.

நவிமும்பை வாஷி ஏ.பி.எம்.சி. மார்க்கெட் வழக்கம் போல செயல்பட்டது. மொத்த மார்க்கெட்டை அரசு மூட சொல்லவில்லை என்றும், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ள சனிக்கிழமை கூட மொத்த மார்க்கெட் செயல்பட வாய்ப்பு இருப்பதாக தேங்காய் மொத்த வியாபாரி சங்கர் ராஜ் தெரிவித்தார்.


Next Story