கர்நாடகாவில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: பயணிகள் அவதி


கர்நாடகாவில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: பயணிகள் அவதி
x
தினத்தந்தி 7 April 2021 9:06 AM IST (Updated: 7 April 2021 9:06 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு,

அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கு 6-வது ஊதிய குழு பரிந்துரையின்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும், தங்களை அரசு ஊழியர்களாக கருத வேண்டும் என்பன உள்பட 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளுடன், அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

இதில் அரசு ஊழியர்களாக கருத வேண்டும் என்ற கோரிக்கையை தவிர மற்ற 9 கோரிக்கைகளை 3 மாதத்திற்குள் நிறைவேற்றுவதாக அரசு எழுத்துப்பூர்வமான வாக்குறுதியை அளித்தது. இதையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் தங்களின் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனால் அரசு அளித்த வாக்குறுதியின்படி தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 7-ந் தேதி (அதாவது இன்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்தனர். இதன்படி இன்று கர்நாடகாவில் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. 

இதனால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.   பேருந்துகள் இயங்காததால் வேலைக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் என பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தனியார் பேருந்துகளை இயக்க கர்நாடக அரசு தற்காலிக அனுமதியை வழங்கியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதனால் போக்குவரத்து கழகங்கள், நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை அரசு நிறைவேற்றுவது கடினமான ஒன்றாகும் என்று கூறப்படுகிறது.

Next Story