பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்தி கொண்டார்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியின் 2வது டோசை இன்று செலுத்தி கொண்டார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அவசரகால தேவைக்காக கொரோனா தடுப்பூசிகளை போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கான பணிகள் கடந்த மார்ச் 1ந்தேதி தொடங்கியது.
இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசி போட முதியவர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு உள்ளிட்டவைகள் கொண்டு ‘கோவின்’ செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முன்பதிவு செய்ய இயலாதவர்கள் தடுப்பூசி போடும் இடத்துக்கு நேரடியாகவும் சென்று பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை அவர் செலுத்தி கொண்டார். கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டு சில வாரங்கள் கழித்து 2வது டோஸ் எடுத்து கொள்ள வேண்டும்.
அதன்படி, பிரதமர் மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் 2வது டோசை இன்று செலுத்தி கொண்டார். கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கான வழிகளில், தடுப்பூசி செலுத்திக்கொள்வதும் ஒன்று. எனவே, தகுதி பெற்ற அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
புதுச்சேரியை சேர்ந்த பி. நிவேதா மற்றும் பஞ்சாப்பின் நிஷா சர்மா ஆகிய இரு செவிலியர்கள் பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசியின் 2வது டோசை செலுத்துவதற்காக பணியமர்த்தப்பட்டு இருந்தனர். அவர்கள் முறைப்படி பிரதமருக்கு 2வது டோசை செலுத்தினர்.
Related Tags :
Next Story