ஆக்சிஜன், படுக்கைவசதி போன்றவை தொடர்பாக சமூகவலைதளங்கள் மூலம் புகார் தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டு


ஆக்சிஜன், படுக்கைவசதி போன்றவை தொடர்பாக சமூகவலைதளங்கள் மூலம் புகார் தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 30 April 2021 6:00 PM IST (Updated: 30 April 2021 6:00 PM IST)
t-max-icont-min-icon

ஆக்சிஜன், படுக்கைவசதி உள்ளிட்டவை தொடர்பாக சமூகவலைதளங்களில் புகார் தெரிவிப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனால், பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன், தடுப்பூசி, படுக்கை வசதி, மருந்து உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், உத்தரபிரதேசத்தின் அமேதி நகரை சேர்ந்த நபர் தனது தாத்தாவிற்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுவதாகவும், உதவுமாறும் டுவிட்டரில் பதிவிட்டரிருந்தார். 

ஆனால், அந்த நபரின் தாத்தாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனவும் பதற்றத்தை உருவாக்கும் வகையில் டுவிட்டரில் கருத்து பதிவிட்டதாக அந்த நபர் மீது போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்தனர். டுவிட்டர் மூலம் உதவி கேட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆக்சிஜன், படுக்கைவசதி போன்றவை தொடர்பாக சமூகவலைதளங்கள் மூலம் புகார் தெரிவிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தல் உள்பட எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என மாநில அரசுகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சமூகவலைதளங்கள் மூலம் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும்போது அவை தவறான தகவல்கள் என்று கூறக்கூடாது. இது போன்று கருத்து தெரிவிப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. இது போன்று சமூகவலைதளங்கள் மூலம் புகார், குறை கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிப்பது உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் செயலாக கருத்தப்படும். மக்கள் தங்கள் குறைகளை சமூகவலைதளங்கள் மூலம் தெரிவிக்கலாம்’ என்றார்.

Next Story