தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் ஆட்சியை பிடித்தபோதும் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வி; திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிர்ச்சி + "||" + Mamata Banerjee loses Nandigram constituency despite taking power in West Bengal; Trinamool Congress volunteers shocked

மேற்கு வங்காளத்தில் ஆட்சியை பிடித்தபோதும் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வி; திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிர்ச்சி

மேற்கு வங்காளத்தில் ஆட்சியை பிடித்தபோதும் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வி; திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிர்ச்சி
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோதும், அதன் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்தார்.
சவாலை ஏற்று களமிறங்கினார்
மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு முன் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பங்கள் அரங்கேறின. அந்த கட்சியை சேர்ந்த மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் என பல தலைவர்கள் பா.ஜனதாவுக்கு தாவினர்.இதில் முக்கியமானவர் சுவேந்து அதிகாரி. மம்தாவின் மந்திரிசபையில் அங்கம் வகித்து வந்த அவர், முதல்-மந்திரியின் தளபதிகளில் ஒருவராக இருந்தார். அவரது வெளியேற்றம் மம்தாவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.அதேநேரம் பா.ஜனதாவில் இணைந்த சுவேந்து அதிகாரியோ, தனது நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா? என 
மம்தாவுக்கு சவால் விடுத்தார். இதை ஏற்று மம்தாவும் தனது பவானிப்பூர் தொகுதியை விட்டுவிட்டு நந்திகிராமில் களமிறங்கினார்.

கடுமையான போட்டி
அங்கு வெற்றிக்கனியை எட்டுவதை கவுரவ பிரச்சினையாக எடுத்துக்கொண்ட அவர் இதற்காக தீவிர களப்பணியாற்றினார். ஆனால் நேற்றைய வாக்கு எண்ணிக்கையின்போது, நந்திகிராமில் தொடக்கம் முதலே மம்தாவின் வெற்றி நிச்சயமற்ற தன்மையிலேயே இருந்தது. தொடக்ககட்ட முடிவுகள் அனைத்தும் சுவேந்து அதிகாரிக்கே சாதகமாக வந்து கொண்டிருந்தன. இடையில் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் கடுமையான போட்டி நிலவியது.

வெற்றி பெற்றதாக அறிவிப்பு
எனினும் இறுதியில் மம்தா பானர்ஜி 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவரது வீட்டில் கூடியிருந்த தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.ஆனால் இந்த மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை. மம்தா பானர்ஜியின் வெற்றி அறிவிப்பை திரும்ப பெற்றுக்கொண்ட தேர்தல் கமிஷன், சுவேந்து அதிகாரி 1,957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்தது.இதனால் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கடும் மோதலும், வாக்குவாதமும் உருவானது.

தோல்வியை ஏற்கிறேன்
எனினும் நந்திகிராம் தொகுதியில் தனது தோல்வியை ஏற்பதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘நந்திகிராம் குறித்து கவலைப்பட வேண்டாம். நான் ஒரு இயக்கத்தை எதிர்த்து போராடியதால், நந்திகிராமில் கஷ்டப்பட்டேன். இது பரவாயில்லை. நந்திகிராம் மக்கள் தாங்கள் விரும்பிய தீர்ப்பை வழங்கி உள்ளனர். அதை நான் ஏற்கிறேன். நாம் 200-க்கு மேற்பட்ட இடங்களில் வென்றிருக்கிறோம், பா.ஜனதா தேர்தலில் தோல்வியடைந்துள்ளது’ என்று தெரிவித்தார்.தேர்தல் கமிஷனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடப்போவதாக கூறிய மம்தா பானர்ஜி, இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார். பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் அரசை ஒதுக்கிவிட்டு, திரிணாமுல் காங்கிரசுக்கு இரட்டை செஞ்சுரி எண்ணிக்கையில் வெற்றியை அளித்தமைக்காக மக்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.

தொண்டர்கள் அதிர்ச்சி
மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்தபோதும், முதல்-மந்திரி தோல்வியடைந்த விவகாரம் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் மம்தா பானர்ஜியின் இந்த தோல்வி, அவர் முதல்-மந்திரியாவதை தடுக்காது. அவர் முதல்-மந்திரியாக பதவியேற்று 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் ஆட்சியை தக்க வைப்பாரா, மம்தா பானர்ஜி?
மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (ஞயாற்றுக்கிழமை) எண்ணப்படுகின்றன.
2. மேற்குவங்காளம் 7வது கட்ட தேர்தல்: மாலை 5.31 மணி வரை 75.06% வாக்குகள் பதிவு
மேற்குவங்காளம் 7வது கட்ட தேர்தலில் மாலை 5.31 மணி வரை 75.06% வாக்குகள் பதிவாகி உள்ளது.
3. கொரோனா குறித்த உரைகளையே நாடுகின்றனர்; பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை மக்கள் விரும்பவில்லை; மம்தா பானர்ஜி காட்டம்
பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை மக்கள் விரும்பவில்லை எனவும், கொரோனா குறித்த உரைகளையே அவர்கள் நாடுவதாகவும் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி காட்டமாக கூறியுள்ளார்.
4. மேற்கு வங்காள 6 ம் கட்ட தேர்தல் 3 .30 மணி நிலவரப்படி 70.42% வாக்குகள் பதிவு
மேற்கு வங்காளத்தில் 6 ம் கட்டமாக நடைபெற்று வரும் தேர்தலில் 3.30 மணி நிலவரம் குறித்து தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
5. மேற்கு வங்காள 6 ம் கட தேர்தல் மதியம் 1.37 மணி நிலவரம்
மேற்கு வங்காளத்தில் 6 ம் கட்டமாக நடைபெற்று வரும் தேர்தலில் மதியம் 1.37 மணி நிலவரம் குறித்து தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது.