இந்தியாவில் கொரோனா சற்றே குறைந்தது; தினசரி பாதிப்பு 4 லட்சத்துக்கு கீழே வந்தது; ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் குணம்


இந்தியாவில் கொரோனா சற்றே குறைந்தது; தினசரி பாதிப்பு 4 லட்சத்துக்கு கீழே வந்தது; ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் குணம்
x
தினத்தந்தி 2 May 2021 7:54 PM GMT (Updated: 2 May 2021 7:54 PM GMT)

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சற்றே குறைந்துள்ளது. தினசரி பாதிப்பு 4 லட்சத்துக்கு கீழே வந்தது. ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்தனர்.

கொரோனா தாக்கம் சற்றே குறைவு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்தது. கடந்த 22-ந்தேதி 3 லட்சத்தை தினசரி பாதிப்பு கடந்தது. தொடர்ந்து 9 நாட்கள் 3 லட்சத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்குள்ளாக்கியது. நேற்று முன்தினம் 4 லட்சத்தையும் கடந்து 4 லட்சத்து 1,993 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த நாளில், தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்துக்கு கீழே வந்திருப்பது சற்று ஆறுதலை அளிப்பதாக அமைந்துள்ளது. அந்த விதத்தில் நேற்று 3 லட்சத்து 92 ஆயிரத்து 488 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று சுமார் 9,500-க்கு குறைவாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா தாக்குதலுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சத்து 57 ஆயிரத்து 457 ஆக அதிகரித்துள்ளது.

3 லட்சத்துக்கும் அதிகமானோர் குணம்

கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்காக நாடெங்கும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெற்ற சிகிச்சையின் விளைவாக நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 865 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக 61 ஆயிரத்து 326 பேர் குணம் அடைந்தனர். உத்தரபிரதேசத்தில் 38 ஆயிரத்து 826 பேரும், டெல்லியில் 27 ஆயிரத்து 421 பேரும், சத்தீஷ்காரில் 13 ஆயிரத்து 532 பேரும், கர்நாடகத்தில் 18 ஆயிரத்து 341 பேரும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்திருக்கிறார்கள். இந்தியாவில் குணம் அடைந்தோர் விகிதம் 81.77 சதவீதம் ஆகும்.

பலி உயர்ந்தது

நேற்று கொரோனா பலி உயர்ந்தது. நேற்று முன்தினம் 3,523 பேர் இறந்த நிலையில் நேற்று 3,689 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு இரையானோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 542 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 802 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பிற மாநிலங்களைப் பொறுத்தமட்டில் டெல்லியில் 412 பேரும், உத்தரபிரதேசத்தில் 304 பேரும், கர்நாடகத்தில் 271 பேரும், சத்தீஷ்காரில் 229 பேரும் கொரோனாவால் மரணத்தை தழுவி உள்ளனர். அருணாசலபிரதேசம், தத்ராநகர் ஹவேலி டாமன்தியு, லட்சத்தீவு, மிசோரம், ஆகிய 4 சிறிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கொரோனா உயிரிழப்பில் தப்பின. இந்தியாவில் கொரோனா பலி விகிதம் 1.10 சதவீதமாக குறைந்துள்ளது.

33.49 லட்சம் பேர் சிகிச்சை

நாட்டில் நேற்று புதிதாக 80 ஆயிரத்து 934 பேர் சிகிச்சையில் சேர்ந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி சிகிச்சை பெறுவோர் மொத்த எண்ணிக்கை என்பது 33 லட்சத்து 49 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 17.13 சதவீதம் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

பரிசோதனையும் அதிகரிப்பு

தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா மாதிரிகளை பரிசோதிப்பதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 18 லட்சத்து 4,954 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளி விவரம் காட்டுகிறது.

 


Next Story