தேர்தலில் தோற்றாலும் மனஉறுதியை இழக்கவில்லை; தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து சரி செய்வோம்; காங்கிரஸ்
தேர்தலில் தோற்றாலும் மனஉறுதியை இழக்கவில்லை. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை சரி செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
பணிவுடன் ஏற்கிறோம்
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா நேற்று இணையவழியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்புதான் இறுதி வார்த்தை. மேற்கு வங்காளம், அசாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய 5 மாநில வாக்காளர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஜனநாயக தீர்ப்பை அளித்துள்ளனர். இந்த தீர்ப்பை பணிவுடனும், பொறுப்புடனும் ஏற்றுக்கொள்கிறோம்.
தேர்தல் முடிவுகள் எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. குறிப்பாக, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் எங்கள் எதிர்பாா்ப்பு நிறைவேறவில்லை. களத்தில் தொண்டர்களும், தலைவர்களும் ஒற்றுமையாக தங்களால் இயன்ற அளவுக்கு பாடுபட்டனர். கட்சிக்கும், மக்களுக்கும் இடைய பிணைப்பை உருவாக்க உழைத்தனர். இருப்பினும் மக்கள் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இல்லை.
தவறை சரி செய்வோம்இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கட்சி மட்டத்தில் ஆய்வு செய்வோம். காரணங்களை கவனமாக பரிசீலிப்போம். தவறுகளை சரி செய்வோம். நாங்கள் தேர்தலில் தேற்றாலும், இந்த சிக்கலான தருணத்தில் மக்களின் குரலாக இருக்க வேண்டும் என்ற எங்கள் மனஉறுதியை இழக்கவில்லை. கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு, சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் மக்கள் பிரச்சினைகளை எழுப்புவோம்.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் முடிவு, எங்களுக்கு கவலை அளிப்பதாக இருந்தாலும், பா.ஜனதாவின் பிரித்தாளும் செயல்திட்டம், பணபலம், அதிகார பலம் ஆகியவற்றை முறியடித்த மக்களுக்கும், மம்தா பானர்ஜிக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.
மு.க.ஸ்டாலினுக்கு நன்றிஇதுபோல், அசாம் மாநிலத்தின் சர்பானந்தா சோனோவால், கேரளாவின் பினராயி விஜயன் ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.
அறிவுக்கூர்மையுடனும், நம்பிக்கையுடனும் வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை வெற்றிக்கு இட்டு சென்றதற்காக மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறோம். நாங்கள் ஒன்றாக செயல்பட்டு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபட உறுதி பூண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.