கேரளாவில், கைவசம் இருந்த ஒரு தொகுதியையும் இழந்த பா.ஜனதா; ‘மெட்ரோமேன்’ ஸ்ரீதரன், நடிகர் சுரேஷ் கோபி போராடி தோல்வி


கேரளாவில், கைவசம் இருந்த ஒரு தொகுதியையும் இழந்த பா.ஜனதா; ‘மெட்ரோமேன்’ ஸ்ரீதரன், நடிகர் சுரேஷ் கோபி போராடி தோல்வி
x
தினத்தந்தி 3 May 2021 10:56 PM IST (Updated: 3 May 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில், தனது கைவசம் இருந்த ஒரு தொகுதியையும் பா.ஜனதா இழந்தது. மெட்ரோமேன் ஸ்ரீதரன், நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியபோதிலும், இறுதியில் தோல்வி அடைந்தனர்.

தலைவர்கள் பிரசாரம்

இடதுசாரி கூட்டணி ஆட்சி நடக்கும் கேரளாவில் கடந்த மாதம் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. 140 தொகுதிகள் கொண்ட கேரளாவில் இடதுசாரி கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அங்கு பா.ஜனதாவுக்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். சபரிமலை விவகாரம், தங்க கடத்தல் ஊழல் போன்ற பிரச்சினைகளை எழுப்பி ஆதரவு திரட்டினர்.

ஆனாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை. பா.ஜனதா ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், நேமம் தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்று, கேரள சட்டசபையில் தனது முதல் கணக்கை தொடங்கியது. மூத்த தலைவர் ஓ.ராஜகோபால்தான் அந்த சாதனையை நிகழ்த்தினார்.

நேமம் தொகுதியில் தோல்வி

இ்ந்த தேர்தலில் பா.ஜனதாவின் கணக்கை முடித்து வைப்போம் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் சவால் விடுத்தார். அதனால், நேமம் தொகுதியை தக்க வைப்பதை கவுரவ பிரச்சினையாக பா.ஜனதா கருதியது. மிசோரம் மாநில முன்னாள் கவர்னர் கும்மணம் ராஜசேகரன், பா.ஜனதா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முந்தைய தேர்தலில் ேதால்வி அடைந்த சிவன் குட்டி நிறுத்தப்பட்டார். அவர் 3 ஆயிரத்து 949 ஓட்டு வித்தியாசத்தில், பா.ஜனதாவிடம் இருந்து தொகுதியை கைப்பற்றினார். இதன்மூலம் பா.ஜனதாவை பழி தீர்த்துக் கொண்டார்.

‘மெட்ரோமேன்’ ஸ்ரீதரன்

88 வயதான ‘மெட்ரோமேன்’ ஸ்ரீதரன், பாலக்காடு தொகுதியில் போட்டியிட்டார். அவர் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலையில் இருந்தார். அவர் வெற்றி பெறுவார் என்று கருதப்பட்டது. ஆனால், கடைசி சுற்றுகளில் இளம் எம்.எல்.ஏ. ஷபி பரம்பில் முன்னிலைக்கு வந்தார். இறுதியில், 3 ஆயிரத்து 859 ஓட்டு வித்தியாசத்தில் ஸ்ரீதரன் தோல்வி அடைந்தார்.

இதுபோல், மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் நடிகர் சுரேஷ் கோபி, திருச்சூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறங்கினார். அவர் பல சுற்றுகளில் முன்னிலையில் இருந்து வந்தார். இறுதியில், 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு பரிதாபமாக தோற்றுப் போனார்.

காஞ்சிரபள்ளி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய மந்திரி அல்போன்ஸ் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் தோற்றுப் போனார். மாநில பா.ஜனதா தலைவர் சுரேந்திரன், தான் போட்டியிட்ட மஞ்சேஸ்வரம், கொன்னி ஆகிய 2 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார். கொன்னி தொகுதி, சபரிமலை அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

காரணம் என்ன?

தங்கள் பிரசாரத்தின்போது, 35 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பா.ஜனதா தலைவர்கள் பெருமிதமாக கூறினர். கடைசியில், கைவசம் இருந்த ஒரு தொகுதியையும் இழந்து பா.ஜனதா படுதோல்வி அடைந்தது.

இதுபற்றி கேரள நிதி மந்திரி தாமஸ் ஐசக், ‘‘கேரளாவில் பா.ஜனதாவின் கணக்கை முடித்து வைத்துள்ளோம். இதன்மூலம் ஒரு பா.ஜனதா எம்.எல்.ஏ. கூட இல்லாத மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது’’ என்று கூறியுள்ளார். ஆனால், சிறுபான்மையினர் வாக்குகள் ஒன்று சேர்ந்ததுதான் பா.ஜனதாவின் தோல்விக்கு காரணம் என்று மாநில பா.ஜனதா தலைவர் சுரேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story