சுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி; ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு


சுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி; ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 May 2021 5:27 AM IST (Updated: 6 May 2021 5:27 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொடர்பான சுகாதார உள்கட்டமைப்பை மார்ச் 2022-ம் ஆண்டு வரை மேம்படுத்த ரிசர்வ் வங்கி ரூ.50 ஆயிரம் கோடி பணப்புழக்கத்தை அறிவித்துள்ளது என்று அதன் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சி பாதிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவுவதால் இந்திய பொருளாதாரத்துக்கு புதிய சோதனைகள் வர உள்ளன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனாவால் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் பாதிக்காமல் இருக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். நிலைமையை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது.

தடுத்து நிறுத்துவோம்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா அலை தீவிரமாக இருந்தாலும் அதன் பொருளாதார பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஏனென்றால் இந்தியா முழுவதும் பொது முடக்கம் இல்லை. ஓரிரு மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் இருக்கிறது. வேறு சில மாநிலங்களில் அதிக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என பல்வேறு வகையான பொது முடக்கம் இருக்கின்றன. கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவோம்.

ரூ.50 ஆயிரம் கோடி

இந்தியா முழுவதும் கொரோனா தொடர்பான சுகாதார உள்கட்டமைப்பை மார்ச் 2022-ம் ஆண்டு வரை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி பணப்புழக்கம் அவசர ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் வங்கிக்கடனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகளால் மீதமுள்ள ஆண்டு பணவீக்கம் பாதிக்கப்படும்.

கொரோனா காலத்தில் சிறப்பாக சேவையாற்றி வரும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், போலீசார் தன்னலமின்றி சிறப்பாக பங்காற்றி வருகிறார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story