இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றின் கோரப்பிடியில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
3.82 லட்சம் பேருக்கு தொற்று
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. உலகம் முழுவதும் தற்போது 15 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பில் இருந்து இதுவரை 13 கோடியே 24 லட்சம் பேர் குணமடைந்து இருக்கிறனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 லட்சத்து 41 ஆயிரம் பலியாகி உள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது சுமார் 2 கோடி பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. இந்நிலையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 3 லட்சத்து 82 ஆயிரத்து 315 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 51 ஆயிரத்து 880 பேருக்கும், கர்நாடகாவில் 44 ஆயிரத்து 631 பேருக்கும், கேரளாவில் 37 ஆயிரத்து 190 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 25 ஆயிரத்து 770 பேருக்கும் தொற்று உறுதியானது.
இதுவரை 2 கோடியே 6 லட்சத்து 65 ஆயிரத்து 148 பேர் கொரோனாவின் கோரப்பிடிக்கு ஆளாகி உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 5-ந் தேதிதான் கொரோனா பாதிப்பு 1 கோடியே கடந்தது. இப்போது ஒரு மாத காலத்தில் 2 கோடியை கடந்துள்ளது.
மீட்பு அதிகரிப்புஇந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பரவல் 3½ லட்சத்துக்கு அதிகமாக இருந்தாலும், இந்த தொற்றின் கோரப்பிடியில் இருந்து மீட்கப்படுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து கூடிக்கொண்டே செல்வது நிம்மதியை தருவதாக அமைந்துள்ளது.
நேற்று முன்தினம் 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் மீட்கப்பட்ட நிலையில் நேற்று 3 லட்சத்து 38 ஆயிரத்து 439 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்திருக்கிறார்கள். கொரோனா மீட்பு விகிதத்தில் இந்தியா தொடர்ந்து உலகளவில் முன்னிலையில் இருக்கிறது.
இந்தியாவில் குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை, 1 கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்து 731 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு விகிதம் 82.03 சதவீதமாக இருக்கிறது.
34.87 லட்சம் பேர் சிகிச்சைநேற்று காலை 8 மணி நிலவரப்படி இந்தியா முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 34 லட்சத்து 87 ஆயிரத்து 229 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் 16.87 சதவீதம் ஆகும்.
சிகிச்சை பெறுகிறவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் மராட்டியம், கர்நாடகம், உத்தரபிரதேசம், கேரளா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, சத்தீஷ்கார், தமிழகம், மேற்கு வங்காளம், பீகார், அரியானா ஆகிய 12 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றை கண்டறிய நேற்று முன்தினம் 15 லட்சத்து 41 ஆயிரத்து 299 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 3,780 பேர் பலி
இந்தியாவில் நேற்று காலை 8 மணி வரையிலான ஒரே நாளில் 3 ஆயிரத்து 780 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்காக பெற்ற சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர். நேற்று முன்தினத்தை ஒப்பிடுகையில் (3,449) நேற்றைய பலி எண்ணிக்கை சற்றே அதிகம் ஆகும்.இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 188 ஆக அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 891 பேர் உயிர் இழந்தனர்.
மேலும், உத்தரபிரதேசத்தில் 351 பேர், டெல்லியில் 338 பேர், கர்நாடகத்தில் 288 பேர், சத்தீஷ்காரில் 210 பேர் மற்றும் பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, ஜார்கண்ட், குஜராத், மேற்கு வங்காளம், பீகார் ஆகிய மாநிலங்களில் 100-க்கும் அதிகமானோர் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.09 சதவீதமாக இருக்கிறது.