மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சரின் கார் மீது தாக்குதல்


மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சரின் கார் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 7 May 2021 5:05 AM IST (Updated: 7 May 2021 5:05 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சர் முரளீதரன் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்க தேர்தலில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. இதற்கிடையில் அங்கு கடந்த 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் மேற்கு வங்கத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் நேற்று பயணம் மேற்கொண்ட, வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளீதரனின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோவை அமைச்சர் முரளீதரன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் உருட்டுக் கட்டைகள் மற்றும் கற்களுடன் ஒரு கும்பல் காரை வழிமறிப்பதையும் பிறகு தாக்குதல் நடத்துவதையும் பார்க்க முடிகிறது.

இது தொடர்பாக முரளீதரன், “மேற்கு மிட்னாபூரில் எனது கார் மீது திரிணமூல் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. எனது தனிப்பட்ட உதவியாளர் தாக்கப்பட்டார். இதனால் எனது பயணத்தை பாதியில் முடித்துக் கொள்ள நேரிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story