தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 4 லட்சத்தை தாண்டியது; 24 மணி நேரத்தில் பலி 4 ஆயிரத்தை நெருங்கியது
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 4 லட்சத்தை தாண்டி உலகளவில் புதிய உச்சம் தொட்டது. 24 மணி நேரத்தில் பலியும் 4 ஆயிரத்தை நெருங்கியது.
மீண்டும் 4 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்குதல் இந்த பூமிப்பந்தில் வேறெங்கும் நிகழ்ந்திராத அளவுக்கு மோசமாக உள்ளது. கடந்த 1-ந்தேதி முதல் முறையாக தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது.அதன்பின்னர் இத்தனை நாட்களாக 4 லட்சத்துக்கு கீழேதான் தினசரி பாதிப்பு இருந்து வந்தது. ஆனால் நேற்று மீண்டும் பாதிப்பு அதிரடியாக 4 லட்சத்தை கடந்தது. அதுமட்டுமின்றி உலகில் இதுவரை வேறெங்கும் ஒரே நாளில் நிகழ்ந்திராத பாதிப்பாக 4 லட்சத்து 12 ஆயிரத்து 262 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது உலகையே அதிர வைத்துள்ளது.
இதன் காரணமாக மொத்த பாதிப்பு 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பரவல் தொடர்ந்து ஏறுமுகம் கண்டால் என்னாவது என்ற பயம், மக்கள் நெஞ்சங்களில் பரவுகிறது.
பலியும் உயர்வுஇதுவரை இல்லாத அளவுக்கு நாட்டில் கொரோனா பலியும் நேற்று அதிகரித்து இருக்கிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 3,980 பேர் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா உயிர்ப்பலியின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 168 ஆக உயர்ந்துள்ளது.வழக்கம்போல நேற்றும் உயிரிழப்பில் மராட்டிய மாநிலம்தான் முதல் இடம். அங்கு 920 பேர் பலியாகி இருப்பது மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.மற்ற மாநிலங்களிலும் பலி கூடுவது சோகம்தான். உத்தரபிரதேசத்தில் 353 பேர், கர்நாடகத்தில் 346 பேர், டெல்லியில் 311 பேர், சத்தீஷ்காரில் 253 பேர் பலியாகி இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.அதேநேரத்தில் இந்தியாவில் கொரோனா இறப்புவிகிதம் என்பது 1.09 சதவீதமாகத்தான் நீடிக்கிறது.
நேற்றும் கூட அருணாசல பிரதேசமும், தத்ராநகர் ஹவேலி டாமன் தியுவும், லடாக்கும், மிசோரமும், நாகலாந்தும் கொரோனா உயிரிழப்பில் இருந்து தப்பி இருப்பது அங்குள்ள மக்களுக்கு நிம்மதியைத் தந்துள்ளது.
3.29 லட்சம் பேர் நலம்கொரோனா தொற்றில் இருந்து நாடு முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெற்ற சிகிச்சையின் பலனாக நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 113 பேர் நலம் பெற்றனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பினர்.
இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 72 லட்சத்து 80 ஆயிரத்து 844 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா மீட்பு விகிதம் 81.99 சதவீதம் ஆகும்.
நேற்று நலம் பெற்றவர்களில் மராட்டிய மாநிலத்தினர்தான் அதிகம். அங்கு 57 ஆயிரத்து 6 பேர் நலம் பெற்றனர். உத்தரபிரதேசத்தில் 40 ஆயிரத்து 852 பேரும், கர்நாடகத்தில் 26 ஆயிரத்து 841 பேரும், கேரளாவில் 23 ஆயிரத்து 106 பேரும் கொரோனா தொற்றில் இருந்து நலம் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
79 ஆயிரம் பேர் புதிதாக சிகிச்சைபுதிதாக நேற்று கொரோனா மீட்புக்காக 79 ஆயிரத்து 169 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதனால் சிகிச்சை பெறுவோர் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 66 ஆயிரத்து 398 ஆக அதிகரித்துள்ளது.இது மொத்த பாதிப்பில் 16.92 சதவீதம் ஆகும்.
தொற்று பரவலுக்கு மத்தியில் பரிசோதனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 19 லட்சத்து 23 ஆயிரத்து 131 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகிறது.