டெல்லியில் ஊடக பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் அனைத்து ஊடக பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர், படுக்கைகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமையை சரி செய்ய மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு தீவிரமாக போராடி வருகிறது. அதே நேரம் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி துணை முதல்-அமைச்சர் மனிஷ் சிசோடியா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “மிகப்பெரிய அளவில் பத்திரிக்கை, ஊடகம், இணையதளங்களில் பணிபுரியும் நபர்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும் தற்போது கொரோனா 3 வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடுத்த 3 மாதங்களில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் மாவட்ட நீதிபதிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் தினமும் 2 முதல் 4 கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு சென்று சோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story