ராஜஸ்தானில் 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு; முதல்-மந்திரி அசோக் கெலாட் அறிவிப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பால் 10-ந் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என அந்த மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் அறிவித்தார்.
முழு ஊரடங்கு
இந்தியாவில் கொரோனா 2-வது அலை ராக்கெட் வேகத்தில் பரவி வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17 ஆயிரம் பேருக்கு பாதிப்புகள் உறுதியானது. அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியுள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 182 ஆக உயர்ந்தது.
தொற்று அதிகரித்து வரும் நிலையில், ராஜஸ்தானில் வருகிற 10-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த உத்தரவின்படி வருகிற 31-ந் தேதிக்கு பின்னரே திருமணங்கள் நடத்த அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற திருமணங்கள் மற்றும் 11 பேருக்கு குறைவானோர் கலந்து கொள்ள கூடிய வீட்டில் சிறிய அளவில் நடத்தப்படும் திருமணங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்மத வழிபாட்டு தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். அவசரகால உதவியாக தனியார், அரசு வாகனங்கள் மட்டும் செயல்படும். மாநிலத்துக்கு இடையேயான சரக்கு வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். வெளிமாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மளிகை காய்கறி கடைகள் சில மணி நேரம் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பணிகள், சேவைகள் தவிர அனைத்து விதமான செயல்பாடுகளும் முடக்கப்படுகின்றன.
முதல்-மந்திரி அறிவிப்புகொரோனாவை தடுக்க ராஜஸ்தான் மந்திரிகள் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு நேற்றுமுன்தினம் தன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் ஒன்றுதான் வழி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகே முதல்-மந்திரி அசோக் கெலாட் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.