'கோவின்’ இணையதள பக்கத்தை ஹேக் செய்ய முடியாது - மத்திய அரசு திட்டவட்டம்


கோவின்’ இணையதள பக்கத்தை ஹேக் செய்ய முடியாது - மத்திய அரசு திட்டவட்டம்
x
தினத்தந்தி 29 May 2021 8:18 PM GMT (Updated: 29 May 2021 8:18 PM GMT)

‘கோவின்’ இணையதள பக்கத்தை யாராலும் ஹேக் செய்ய முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்துபவர்களின் வசதிக்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் ’கோவின்’ என்ற இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ளோர் இந்த இணையதள பக்கத்தில் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த இணையதள பக்கத்தில் தடுப்பூசி போடப்படும் இடம், நேரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த இணையதள பக்கம் தடுப்பூசி மையத்தில் கூட்ட நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க வழிவகுக்கிறது. 

இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் தடுப்பூசி மையங்களுக்கே நேரடியாக சென்று அங்கு பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

இதற்கிடையில், கோவின் இணையதள பக்கத்தில் தடுப்பூசி செலுத்த விரும்புவோர் தங்களில் பல்வேறு தனிப்பட்ட தகவல்களை பதிவிட வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனால், அந்த தகவல்களை திருடும் நோக்கத்தோடு கோவின் இணையதள பக்கத்தை ஹேக் செய்ய முயற்சிகள் நடைபெறலாம் என்று சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், கோவின் இணையதள பக்கத்தை யாராலும் ஹேக் செய்ய முடியாது என்று மத்திய அரசு நேற்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 40 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் கோவின் இணையதள பக்கத்தில் பதிவு செய்து கொரோனா தடுப்பூசி செல்கின்றனர். அதேவேளை 50 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் நேரடியாக தடுப்பூசி மையத்திற்கே சென்று அங்கு பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். சராசரியாக 8 இந்தியர்களில் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Next Story