ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு - மத்திய மந்திரி மன்சுக் மான்டவியா தகவல்


ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு - மத்திய மந்திரி மன்சுக் மான்டவியா தகவல்
x
தினத்தந்தி 30 May 2021 1:19 AM GMT (Updated: 30 May 2021 1:19 AM GMT)

நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய ரசாயனத்துறை இணை மந்திரி மன்சுக் மான்டவியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்து, பல்வேறு மாநிலங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அதே வேளையில், உள்நாட்டிலும் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி அதிகரித்துள்ளதாக மத்திய ரசாயனத்துறை இணை மந்திரி மன்சுக் மான்டவியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த மருந்தின் தினசரி உற்பத்தி 33 ஆயிரம் குப்பிகளாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையின் கீழ் தற்போது தினசரி உற்பத்தி 3.50 லட்சமாக உயர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் 20-ல் இருந்து 60 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போது நாட்டில் தேவைக்கு அதிகமான ரெம்டெசிவிர் வினியோகம் உள்ளதால், மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஒதுக்கீட்டை நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதை உறுதி செய்ய தேசிய மருந்துப்பொருள் விலை நிர்ணய ஆணையத்துக்கும், மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர மருத்துவ தேவைக்காக 50 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை கொள்முதல் செய்து இருப்பில் வைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story