மேற்கு வங்காள முன்னாள் தலைமை செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்


படம்:  ANI
x
படம்: ANI
தினத்தந்தி 1 Jun 2021 4:10 PM IST (Updated: 1 Jun 2021 4:10 PM IST)
t-max-icont-min-icon

இன்று முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலைமை ஆலோசகர் பொறுப்பில் அலபன் பந்தோபாத்யாவை மம்தா பானர்ஜி நியமித்துள்ளார்.

புதுடெல்லி

மேற்கு வங்காளத்தில் ‘யாஸ்’ புயல் பாதிப்புகளை பிரதமர் மோடி பார்வையிட சென்றிருந்தபோது, கொல்கத்தாவில் ஆய்வு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. பிரதமர் மோடியை மட்டும் சந்தித்து விட்டு அவர் சென்று விட்டார். இதற்கு கவர்னர் ஜெகதீப் தாங்கர் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

அடுத்த சில மணி நேரத்தில் மேற்கு வங்காள மாநில அரசின் தலைமைச்செயலாளர் அலபன் பந்தோபாத்யாவை மத்திய அரசு அதிரடியாக திரும்ப அழைத்தது. 

மேற்கு வங்காள அரசின் தலைமை செயலாளர் அலபன் பந்தோபாத்யாவின் பணிக்காலம் மே 31-ந் தேதியுடன் (நேற்று) முடிவடைய இருந்தது. ஆனால், கொரோனா தடுப்பு பணிக்காக, மாநில அரசின் வேண்டுகோளின்பேரில், அவருக்கு மத்திய அரசு 3 மாத பணி நீட்டிப்பு அளித்திருந்தது.

கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் தலைமைச்செயலாளரை திரும்ப அழைப்பது, மத்திய அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதை காட்டுகிறது மம்தா பானர்ஜி விமர்சித்து இருந்தார். 

இந்த நிலையில், மேற்குவங்காள தலைமைச் செயலாளரை டெல்லிக்கு அழைக்கும் உத்தரவை ஏற்க முடியாது என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசின் முடிவு அதிர்ச்சியளிப்பதாகவும், ஒரு தலைபட்சமானது எனவும் விமர்சித்து இருந்தார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி நார்த் பிளாக்கில் மத்திய பணியில் சேருமாறு அலபன் பந்தோபாத்யாவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.ஆனால், இன்று முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலைமை ஆலோசகர் பொறுப்பில் அலபன் பந்தோபாத்யாவை மம்தா நியமித்துள்ளார். 

இந்த நிலையில் மேற்கு வங்காள முன்னாள் தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாவுக்கு  பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 இன் கீழ் உள்துறை அமைச்சகம் (எம்.எச்.ஏ) நோட்டீஸ்  வழங்கியுள்ளது, அவரை 3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டு உள்ளது.

Next Story