கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல்


கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல்
x
தினத்தந்தி 3 Jun 2021 6:56 AM IST (Updated: 3 Jun 2021 6:56 AM IST)
t-max-icont-min-icon

கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு 14 நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த மாதம் 4-ம் தேதி சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தான்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர்.

மோசமான காயங்களுடன் கிடந்த சாகர் தான்கட்டை மற்றொரு நண்பர் சோனு மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். ஆனால், சிகிச்சைப் பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார். இதையடுத்து, சாகர் தான்கெட் உயிரிழந்ததைக் கொலை வழக்காக போலீஸார் மாற்றி மல்யுத்த வீரர் சுஷில் குமாரைத் தேடி வந்தனர்.

கடந்த மூன்று வாரங்களாக தனிப்படை அமைத்து சுஷில் குமாரை ஹரியாணா, உத்தரகாண்ட் எனப் பல்வேறு மாநிலங்களில் தேடி வந்தனர். இதற்கிடையே,  மல்யுத்த வீரர் சுஷில் குமார் இருப்பிடம் குறித்து யாரேனும் தகவல் அளித்தால் அவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என டெல்லி போலீசார் அறிவித்தனர். 

இதற்கிடையில், ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றுள்ள சுஷில் குமாரை தீவிர தேடுதலுக்கு பின்னர் கடந்த 20-ம் தேதி டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சுஷில் குமார் ஏற்கனவே 9 நாட்கள் போலீஸ் காவலில் இருந்தார்.

இந்நிலையில், சுஷில் குமாரின் போலீஸ் காவலை நீட்டிக்க வேண்டும் என்று டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே 9 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என கூறிய நீதிமன்றம் சுஷில் குமாரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. 

Next Story