உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி: 22 பேருக்கு தீவிர சிகிச்சை


உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி: 22 பேருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 4 Jun 2021 1:28 AM IST (Updated: 4 Jun 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஒரு துயர சம்பவமாக கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலியாகினர்.

அலிகார், 

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் அருகே, கள்ளச்சாராயம் குடித்ததில் 52 பேர் பலியான விவகாரம், மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் சம்பந்தப்பட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அதற்கு உடந்தையாக செயல்பட்ட கலால்வரித்துறை உயர் அதிகாரிகள் 2 பேர் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் அலிகார் அருகே கள்ளச்சாராயத்திற்கு மீண்டும் 5 பேர் பலியாகி உள்ளனர். ரோகெரா கிராமத்தில் செங்கல் சூளை தொழிலாளர்கள் ஒரு பாலத்தின் அடியில் கிடைத்த கள்ள சாராயத்தை குடித்துள்ளனர்.

போலீசார் விசாரணையில், முதல் சம்பவத்தால் போலீஸ் கெடுபிடி அதிகரித்ததால் கள்ளச்சாராய வியாபாரிகள், தங்களிடமிருந்த சாராயத்தை பாலத்தின் அடியில் வீசியுள்ளனர். அதைப் பார்த்த கூலித்தொழிலாளிகள் வீணாகாமல் இருந்த சாராயத்தை எடுத்து குடித்து மகிழ்ந்துள்ளனர்.

சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி எடுத்து, மயங்கினர். இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மொத்தம் 27 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story