குஜராத்: ஐகோர்ட் நீதிபதி மீது செருப்பு வீசிய டீக்கடைக்காரருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை


குஜராத்: ஐகோர்ட் நீதிபதி மீது செருப்பு வீசிய டீக்கடைக்காரருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை
x
தினத்தந்தி 5 Jun 2021 4:12 AM IST (Updated: 5 Jun 2021 4:12 AM IST)
t-max-icont-min-icon

2012-ம் ஆண்டு குஜராத் ஐகோர்ட் நீதிபதி மீது டீக்கடைக்காரர் செருப்பு வீசியுள்ளார்.

காந்திநகர்,

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள பாஹ்யாவதர் நகரில் 2012-ம் ஆண்டு சாலையோர டீக்கடை வைத்திருந்தவர் பவாஜ். டீக்கடை சாலையோரம் இருந்தால் அதை அகற்றுமாறு நகராட்சி நிர்வாகம் சார்பில் பாவாஜிடம் அதிகாரிகள் உத்தரவிட்டனர். 

இந்த உத்தரவை எதிர்த்து கீழமை கோர்ட்டில் பாவாஜி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் பாவாஜியின் டீக்கடையை அகற்றக்கூடாது என நகராட்சி நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவிட்டது. கீழமை கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து நகராட்சி நிர்வாகம் அலகாபாத் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.

வழக்கு விசாரணை நடைபெற்றதால் தனது டீக்கடை மூடப்பட்டது. இதனால், பாவாஜிக்கு வருமானம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், வழக்கு விசாரணையின் போது அவர் ராஜ்கோட்டில் இருந்து அலகாபாத்திற்கு செல்ல வேண்டிய இருந்தது. 

வருமானம் இல்லாததால் வழக்கு விசாரணையின் போது பயண செலவிற்காக பிறரிடம் கடன் வாங்கி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், பாவாஜிக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணை தொடர்ந்து நீடித்துக்கொண்டே சென்றுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த பாவாஜி கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி கேஎஸ் ஜஹ்வீர் முன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதி கேஸ் ஜஹ்வீர் மீது செருப்பு வீசினார். இதில் செருப்பு நீதிபதி மீது விழாமல் நீதிமன்ற வளாகத்தில் விழுந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அலகாபாத் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதில், நீதிபதி மீது செருப்பு வீசிய குற்றத்தை பாவாஜி ஒப்புக்கொண்டார். தனது கடை மூடப்பட்டதால் வருமானம் இழப்பு ஏற்பட்டதாகவும், மேலும், வழக்கு விசாரணை நீண்ட நாட்கள் சென்றதால் ஆத்திரத்திலேயே நீதிபதி மீது செருப்பு வீசியதாக அவர் தெரிவித்தார். 

பாவாஜி தரப்பு வாதத்தையடுத்து தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், ஐகோர்ட் நீதிபதி மீது பாவாஜி செருப்பு வீசியது மிகவும் கண்டனத்திற்குரியது.  மேலும், அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது. இந்த குற்றத்திற்காக பாவாஜிக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. பாவாஜியின் நிதி சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு அபராதம் விதிக்கப்படவில்லை என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Next Story