லட்சத்தீவில் மீன்பிடி படகுகளில் அரசு அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவார்கள் - நிர்வாகியின் புதிய உத்தரவால் மீண்டும் சர்ச்சை

லட்சத்தீவில் மீன்பிடி படகுகளில் அரசு அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவதாக தீவு நிர்வாகி வெளியிட்டுள்ள புதிய உத்தரவால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.
கொச்சி,
லட்சத்தீவில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை தீவின் நிர்வாகியான பிரபுல் கோடா படேல் சமீபத்தில் வெளியிட்டார். இதில் தீவில் மது அறிமுகம், மாட்டிறைச்சிக்கு தடை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
இந்த சீர்திருத்தங்களுக்கு தீவில் மிகப்பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைப்போல தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் இந்த நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மேற்படி சீர்திருத்தங்களை திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளன.
இதில் ஒருபடி மேலே சென்ற கேரளா, இந்த சீர்திருத்தங்களை ரத்து செய்யக்கேட்டும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாகவும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதைப்போல மாநிலத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்திலும் ஈடுபட்டு உள்ளன.
இந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், லட்சத்தீவில் மேலும் சில உத்தரவுகளை நிர்வாகி வெளியிட்டு உள்ளார். இதில் முக்கியமாக, அங்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் படகுகளில் உளவுத்தகவல்களை சேகரிப்பதற்காக அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதைப்போல குடியிருப்பு மற்றும் பொது இடங்களில் குவியும் இளநீர் ஓடுகள், தென்னை ஓலைகள், தேங்காய் நார் உள்ளிட்டவற்றை அறிவியல் ரீதியாக அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது லட்சத்தீவில் மீண்டும் எதிர்ப்பை கிளப்பி இருப்பதுடன், மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த உத்தரவு தொடர்பாக தீவின் நிர்வாகியை லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
லட்சத்தீவில் கடற்படை, கடலோர காவல்படையால் சிறப்பான கண்காணிப்பு நடைமுறை அமலில் இருக்கிறது. அது மட்டுமின்றி கடலோர காவல்படை தலைமையகத்தில் அதிநவீன ரேடார் அமைப்பு உள்ளது. அதன் மூலம் கடலில் 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பல்களின் செயல்பாடுகள் குறித்தும் கண்காணிக்க முடியும்.
அது மட்டுமின்றி மாதத்துக்கு ஒருமுறை அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை உள்ளூர் மீனவர்களை கடலோர காவல்படை அதிகாரிகள் சந்தித்து கடலில் சந்தேகத்துக்குரிய பொருட்கள் ஏதாவது தென்பட்டால் அது குறித்து தகவல் தெரிவிப்பதற்கான பயிற்சி அளித்து வருகின்றனர். அப்படி தீவில் மீனவர்களுக்கும், பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு இருக்கிறது.
அப்படியிருக்க இந்த உத்தரவு மூலம் இங்கு என்ன மாதிரியான சூழலை உருவாக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள்? அதுமட்டுமின்றி லட்சத்தீவில் நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகள் கடலுக்கு சென்று வருகின்றன. இதில் எத்தனை அதிகாரிகளை நியமிக்க முடியும்?
தீவு நிர்வாகத்தின் இந்த உத்தரவு மூலம் லட்சத்தீவில் வாழும் அப்பாவி மீனவ சமூகத்தினரை அவர்கள் நம்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. கடலோர பகுதிகளை கண்காணிக்கும் நடவடிக்கை இது என கூறுவது உண்மையிலேயே கேலிக்கூத்தானது.
ஏனெனில் அரசு அதிகாரிகளை மீன்பிடி படகில் பணியமர்த்தி கண்காணிக்கும் நடவடிக்கை பிற கடலோர மாநிலங்களான குஜராத், கேரளா, தமிழ்நாடு போன்றவற்றில் கூட இல்லை.
இவ்வாறு முகமது பைசல் கூறினார்.
Related Tags :
Next Story