போலீஸ் நிலையத்திற்குள் மாடுடன் விவசாயிகள் தர்ணா போராட்டம்


போலீஸ் நிலையத்திற்குள் மாடுடன் விவசாயிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2021 7:56 AM GMT (Updated: 7 Jun 2021 7:56 AM GMT)

அரியானா மாநிலம் தோஹானாவில் கைது செய்த விவசாயிகளை விடுவிக்க கோரி போலீஸ் நிலையத்திற்குள் மாடுடன் விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26 முதல் போராடி வருகின்றனர். கடும் குளிர், வெயில், கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் 6 மாதங்களுக்கும் மேலாக அவர்களது போராட்டம் தொடர்ந்து வருகிறது.

கடந்த  ஜூன் 1 ம் தேதி, அரியானா மாநிலம் தோஹானாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனை விழாவில் எம்.எல்.ஏ தேவேந்தர் பாப்லி கலந்து கொண்டார்.  அப்போது ​​விவசாயிகள் அவரது காரை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில், பாப்லியின் தனி உதவியாளருக்கு தலையில் காயம் ஏற்பட்டது மற்றும் எம்.எல்.ஏ வாகனத்தின் கண்ணாடி  அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக போராட்டக்காரர்களில்  இரண்டு பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சனிக்கிழமையன்று, எம்.எல்.ஏ தன்னைத் தாக்கியவர்களை மன்னித்ததாக" கூறினார்.  மேலும் மோதலின் போது அவர் நடந்து கொண்ட விதத்திற்கு மன்னிப்பு கோரினார். 

தோஹானாவில் உள்ள பாப்லியின் இல்லத்தின் முன் நடைபெற்ற  போராட்டத்தின் மீது ஜூன் 1 அன்று அதே நாளில் மற்றொரு வழக்குப்பதிவு  செய்யப்பட்டது. இந்த போராட்டம் தொடர்பாக 27 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், இரண்டு விவசாயிகள் இன்னும் நீதிமன்றக் காவலில் உள்ளனர். சதர் காவல் நிலையத்தில் போராட்டக்காரர்கள் இந்த இரண்டு விவசாயிகளையும் விடுவிக்கக் கோரி வருகின்றனர்.

தற்போது  தோஹானாவில் விவசாயிகளுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து உள்ளது.  நூற்றுக்கணக்கான விவசாயிகள்  நகரத்தின் சதர் போலீஸ்  நிலையத்திற்குள் புகுந்து  போலீஸ் நிலைய வளாகத்தில் ஒரு கூடாரத்தை அமைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளில் ஒருவர் மாட்டை அழைத்து வந்து உள்ளார். அவர் போரட்டத்திற்கு வந்து விட்டால் அதனை கவனிக்க ஆள் இல்லை என போராட்டத்திற்கு அழைத்து  வந்து உள்ளார். 

விவசாயிகள் போலீஸ் நிலைய வளாகத்தில் இரவை  கழித்து வருகின்றனர், விவசாயிகள்  தலைவர்களான குர்னம் சிங் சாதுனி, ராகேஷ் டிக்கைட், சுவராஜ் இந்தியாவின் தலைவர் யோகேந்திர யாதவ் ஆகியோரும் சனிக்கிழமை இரவு போராட்டக்காரர்களுடன் இரவை கழித்தனர். நேற்று பஞ்சாப் விவசாயி தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹான் விவசாயிகளுடன் இணைந்தார்.

அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் உணவு மற்றும் குடிநீரை வழங்கி வருகின்றனர்" என்று தானாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ள விவசாயிகளில் ஒருவரான மந்தீப் நாத்வான் கூறினார்.

Next Story