மும்பை ஆரே காலனியின் 812 ஏக்கர் நிலம் வனத்துறையிடம் ஒப்படைப்பு

மும்பை ஆரே காலனியின் 812 ஏக்கர் நிலம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மும்பை,
மும்பை ஆரே காலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்க கடந்த தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. இந்த நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி அமைந்த உடன், அங்கு மெட்ரோ ரெயில் பணிமனை திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆரே காலனி இடம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. மும்பையின் நுரையீரலாக கருதப்படும் ஆரே காலனியின் பசுமையை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ஆரே காலனி அதிகாரிகள், தங்களுக்கு சொந்தமான இடத்தை அரசின் வனத்துறைக்கு மாற்றி கொடுத்தனர். இதுகுறித்து முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:-
ஆரே காலனி அதிகாரிகளால் வழங்கப்பட்ட நிலத்தில் 125 ஹெக்டேர் போரிவிலியிலும், 71 ஹெக்டேர் கோரேகாவிலும், 89 ஹெக்டேர் மரோல் மரோஷியையும் உள்ளடங்கியது. இந்த நிலம் தலைமை வன பாதுகாவலரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதன் விளைவாக மும்பை பெருநகரத்தின் நடுவில் 812 ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டை உருவாக்க முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story