தலைமை கேட்டு கொண்டால் கட்சியிலிருந்து விலகுவேன்; பா.ஜ.கவில் இணைய மாட்டேன் -கபில்சிபல்

தலைமை கேட்டு கொண்டால் கட்சியிலிருந்து விலகுவேன். ஆனால், பா.ஜ.கவில் இணைய மாட்டேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் கூறினார்.
புதுடெல்லி
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜிதின் பிரசாதா புதன்கிழமை பா.ஜ.க.வில் இணைந்தார்.
அவர் பா.ஜ.க.வில் இணைந்தது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியதாவது:-
கட்சித் தலைமைக்கு பிரச்சினைகள் என்னவென்று தெரியும். அவர்கள் கேட்டறிவார்கள் என்றும் நம்புகிறேன். காரணம், பிரச்சினையைக் கேட்டறியாமல் எதுவும் இங்கு தங்காது. கேட்கும் திறனில்லையெனில், மோசமான நாள்களை நோக்கி விழக்கூடும்.
ஜிதின் பிரசாதா செய்ததற்கு நான் எதிரானவன் இல்லை. அவர் செய்ததற்கு ஏதேனும் காரணம் இருந்திருக்கும், அது வெளியிடப்படவில்லை. ஆனால், அவர் பா.ஜ.க.வில் இணைந்திருப்பதைத்தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
இதையடுத்து, கட்சியின் மீது காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை இழந்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளிக்கையில், நாங்கள் உண்மையான காங்கிரஸ்காரர்கள். பா.ஜ.க.வில் இணைவது பற்றி ஒருபோதும் சிந்திக்க மாட்டோம். கட்சித் தலைமை என்னை விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டால், அதன் அடிப்படையில் கட்சியிலிருந்து விலகுவேன். ஆனால், பா.ஜ.கவில் இணைய மாட்டேன் என கூறினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோனியா காந்திக்கு மூத்த தலைவர்கள் கடிதம் எழுதினர்.குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, பூபேந்தர் ஹூடா, பிரிதிவிராஜ் சவான், கபில் சிபல், மணிஷ்திவாரி, முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட 23 பேர் எழுதிய கடிதம் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story