2019-20 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் அறிக்கை வெளியீடு


2019-20 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் அறிக்கை வெளியீடு
x
தினத்தந்தி 11 Jun 2021 4:36 AM GMT (Updated: 11 Jun 2021 4:36 AM GMT)

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனுமதியுடன், 2019-20ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் அறிக்கை வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் 2019-20 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி குறித்த ஆய்வின் அறிக்கை, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனுமதியுடன் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் நாடு முழுவதும் உயர்கல்வியின் தற்போதைய நிலவரம் மீதான முக்கிய செயல்திறன் குறியீடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கை 11.4% வளர்ச்சியடைந்திருப்பதாகவும், இந்தக் காலகட்டத்தில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 18.2 சதவீதம் அதிகரித்ததாகவும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 

2014-15 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் 24.3 சதவீதமாக இருந்ததாகவும், 2019-20ஆம் ஆண்டில் 27.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் உயர்கல்வியில் சேர்ந்த மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சமாகவும், 2019-20ஆம் ஆண்டில் 3 கோடியே 85 லட்சமாகவும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

குறிப்பாக முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 2014-15ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 17 ஆயிரமாக இருந்த நிலையில், 2019-20ம் ஆண்டில் அது 2 லட்சத்து 3 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story