காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்; பா.ஜனதா அறிவுறுத்தல்


காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்; பா.ஜனதா அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 11 Jun 2021 6:14 PM GMT (Updated: 11 Jun 2021 6:14 PM GMT)

காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என பா.ஜனதா அறிவுறுத்தி உள்ளது.

பா.ஜனதா பதிலடி
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டது. குறிப்பாக பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு (பங்க்) முன்பு இந்த போராட்டம் நடந்தது. ஆனால் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக காங்கிரஸ் கட்சி, தான் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பதாவது:-

சர்வதேச சந்தை நிலவரம்
சர்வதேச கச்சா எண்ணெய் விலை அப்படியே இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக எங்களை கேள்வி கேட்பவர்கள் (காங்கிரஸ்), தாங்கள் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) குறைக்க வேண்டும். இது மக்களுக்கு நிவாரணமாக அமையும்.ஏனெனில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எரிபொருள் மீது அதிகமான வாட் வரி விதிக்கப்படுகிறது. அந்தவகையில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் டீசல் மீது 26 சதவீத வாட் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் பா.ஜனதா ஆளும் குஜராத்தில் 20.2 சதவீதம் மட்டுமே விதிக்கப்படுகிறது.

இறக்குமதி சார்பு
இதைப்போல பெட்ரோல் மீது ராஜஸ்தானில் 36 சதவீதம் வாட் வரி விதிக்கப்படுகையில், அரியானாவில் வெறும் 16.6 சதவீதம் மட்டுமே போடப்பட்டு உள்ளது. எரிபொருள் விஷயத்தை பொறுத்தவரை நாம் இறக்குமதியை சார்ந்திருக்கிறோம். பெட்ரோல், டீசல் விலையில் சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரம் முக்கிய பங்காற்றுகிறது. சர்வதேச சந்தையில் விலை வீழ்ச்சியடையும்போது, இந்தியாவிலும் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

‘மக்களால் 20 ரூபாய் கொடுத்து ஐஸ்கிரீம் வாங்க முடியுமானால், பெட்ரோல்-டீசலும் வாங்க முடியும்’ என்று முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, அப்போதைய நிதி மந்திரியான ப.சிதம்பரம் கூறியிருந்ததையும் ரவிசங்கர் பிரசாத் சுட்டிக்காட்டியுள்ளார்.

Next Story