கர்நாடகாவில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம்; காங்கிரஸ் தலைவர்கள் கைது


கர்நாடகாவில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம்; காங்கிரஸ் தலைவர்கள் கைது
x
தினத்தந்தி 12 Jun 2021 12:56 AM IST (Updated: 12 Jun 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய முன்னாள் முதல் மந்திரி, மாநில காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.



பெங்களூரு,

நாட்டின் முக்கிய பெருநகரங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.  மும்பை, ஜெய்ப்பூர் உள்ளிட்ட சில நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அக்கட்சியை சேர்ந்த முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் மாநிலம் முழுவதுமுள்ள 800 பெட்ரோல் நிலையங்களில் நடத்தப்பட்டது.  இதுபற்றி டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, 2021ம் ஆண்டில் பெட்ரோல் விலையை பா.ஜ.க. 48 முறை உயர்த்தியுள்ளது.

நடுத்தர வருவாய் ஈட்டும் மக்கள் எத்தனை முறை சம்பள உயர்வு பெற்றுள்ளனர்?  குறைந்தபட்ச ஊதியம் எத்தனை முறை உயர்த்தப்பட்டு உள்ளது?  தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் எத்தனை முறை ஊதியம் உயர்த்தப்பட்டு உள்ளது?  விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை எத்தனை முறை அதிகரிக்கப்பட்டு உள்ளது?  

இது பா.ஜ.க.வின் பகல் கொள்ளை என கூறியுள்ளார்.  பெட்ரோல் வரி என்ற பெயரில் ஒவ்வொருவரிடமும் பா.ஜ.க. பிக்-பாக்கெட்டில் ஈடுபடுகிறது.  கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல் வழியே வரியாக பா.ஜ.க. ரூ.20.60 லட்சம் கோடி சேகரித்து உள்ளது என்றும் கூறியுள்ளார்.  இப்படியே போனால், வரும் 2024ம் ஆண்டுக்குள் பெட்ரோல் ரூ.200க்கு விற்பனை செய்யப்படும் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து, முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.


Next Story