ஆய்வுகளின் அடிப்படையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி மாற்றம் - நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தகவல்


ஆய்வுகளின் அடிப்படையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி மாற்றம் - நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தகவல்
x
தினத்தந்தி 12 Jun 2021 9:06 AM GMT (Updated: 12 Jun 2021 9:06 AM GMT)

கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி குறித்து மக்கள் பீதியடைய தேவையில்லை என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்த இரண்டு தடுப்பூசிகளும் 2 டோஸ்களாக மக்களுக்கு செலுத்தப்படுகின்றன. இதில் கோவேக்சின் முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் 4 முதல் 6 வார இடைவெளிக்குள் 2-வது டோஸ் கோவேக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் கோவிஷீல்டு தடுப்பூசி 6 முதல் 8 வாரம் இடைவெளியில் மக்களுக்கு செலுத்தப்பட்டது. பின்னர் இடைவெளியை 12 முதல் 16 வாரங்கள் வரை நீட்டிகலாம் என கோவிட் பணிக்குழு பரிந்துரை செய்தது. இதனால் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசிக்கான நெறிமுறை மாற்றப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து கோவிஷீல்டு தடுப்பூசியின் இடைவெளியை குறைப்பது பயனுள்ளதாக இருக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுவதாக அண்மையில் செய்திகள் வெளியானது. இதனால் கோவிஷீல்டு முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களிடையே, 2-வது டோஸ் செலுத்துவது குறித்த குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையிலேயே கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி குறைக்கப்பட்டது என்றும் இது குறித்து தேசிய நோய்த் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு வழங்கும் வழிமுறைகளின்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story