கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு: மத்திய பிரதேசத்தின் இந்தூரில் 49 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு 49 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்தூர்,
இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு, அதன் தொடர்ச்சியாக கருப்பு பூஞ்சை நோய் தொற்றும் ஏற்பட்டு வருகிறது. இதனால், மக்கள் அதற்கும் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
கொரோனா சிகிச்சைக்கு ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட கூடிய சாத்தியம் அதிகமுள்ளது என கூறப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு காணப்படுகிறது.
இதனை முன்னிட்டு ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம், ஒடிசா, குஜராத், பஞ்சாப், அரியானா, கர்நாடகா, பீகார் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இதனை தொற்று நோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்று நோயாக அறிவித்து உள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 49 பேர் உயிரிழந்து உள்ளனர் என மாவட்ட சுகாதார துறையின் தகவல் மேலாளர் அபூர்வா திவாரி தெரிவித்து உள்ளார்.
இந்தூரில் மொத்தம் 764 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களில் 149 நோயாளிகள் சிகிச்சையில் குணமடைந்து சென்றுள்ளனர். 49 பேர் நோய் பாதிப்பினால் உயிரிழந்து விட்டனர் என கூறியுள்ளார்.
இதனால், 566 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் 37 பேர் காந்தி நினைவு கல்லூரி மற்றும் மருத்துவமனையிலும், 12 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளனர் என அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story