இமாச்சலபிரதேசம்: அமலுக்கு வந்த ஊரடங்கு தளர்வுகள் - சிம்லா நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்


இமாச்சலபிரதேசம்: அமலுக்கு வந்த ஊரடங்கு தளர்வுகள் - சிம்லா நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 14 Jun 2021 12:18 PM IST (Updated: 14 Jun 2021 12:18 PM IST)
t-max-icont-min-icon

இமாச்சலபிரதேசத்தில் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

சிம்லா, 

இமாச்சலபிரதேசமாநிலத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. அம்மாநிலத்தில் நேற்று 237 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 98 ஆயிரத்து 550 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 777 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் அமலில் உள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளது. மேலும், வேறு மாநிலங்களில் இருந்து இமாச்சலப்பிரதேசத்திற்குள் நுழைய ’கொரோனா இல்லை’ சான்றிதழ் கட்டாயம் என்பது நீக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டங்களுக்கு இடையே 50 சதவிகித இருக்கை வசதியுடன் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கடைகள் திறக்கப்படும் நேரம் மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வேறுமாநிலங்களில் இருந்து இமாச்சலபிரதேசத்திற்குள் நுழைய இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அண்டை மாநிலங்களில் இருந்து மக்கள் இமாச்சலப்பிரதேசத்திற்குள் நுழைந்து வருகின்றனர். இந்த நடைமுறைகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

கோடைக்காலம் என்பதால் மக்கள் இமாச்சலப்பிரதேசத்தின் சிம்லா நோக்கி படையெடுக்கத்தொடங்கியுள்ளனர். மிகவும் பிரபலமான சுற்றுலாதளமாக உள்ள சிம்லாவுக்கு செல்வதற்காக அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் நேற்று முதல் இமாச்சலப்பிரதேசத்திற்கு வரத்தொடங்கியுள்ளனர். 

மேலும், இமாச்சலபிரதேசத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் சிம்லா நோக்கி வரத்தொடங்கியுள்ளனர். இதனால், இமாச்சலபிரதேச எல்லை மற்றும் சிம்லா பகுதியில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது.

Next Story