நில முறைகேடு குற்றச்சாட்டு: ராமர் கோவில் அறக்கட்டளைக்கு விஎச்பி ஆதரவு


நில முறைகேடு குற்றச்சாட்டு: ராமர் கோவில் அறக்கட்டளைக்கு விஎச்பி ஆதரவு
x
தினத்தந்தி 15 Jun 2021 2:01 AM IST (Updated: 15 Jun 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பொய்கள் மூலமாக மக்களை தவறாக வழிநடத்த முயற்சி நடப்பதாக விஎச்பி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாக அறக்கட்டளை மீது எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து உள்ளன.  ராமர் கோவிலுக்காக பேக் பைசி கிராமத்தில் 1.208 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு உள்ளது. 

ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை ரூ.18.5 கோடிக்கு அறக்கட்டளை வாங்கியிருப்பதாகவும், இதில் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மற்றும் சமாஜ்வாடியை சேர்ந்த மாநில முன்னாள் மந்திரி பவன்சிங் ஆகியோர் நேற்று முன்தினம் புகார் தெரிவித்தனர். 

இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. எனினும், இந்தக் குற்றச்சாட்டை ராமர் கோவில் அறக்கட்டளை மறுத்துள்ளது. இதற்கிடையே, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு ராம ஜென்மபூமி அறக்கட்டளைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 

இது குறித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கூறுகையில், “ அறக்கட்டளைக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், பொய்கள் மூலமாக மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர்” என்றார்.


Next Story